கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்பு; 2 பேர் கைது


கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 8:12 PM GMT)

கன்னியாகுமரியில் திருட்டு போன கார் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் பழவூரை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 30). நேற்றுமுன்தினம் இவர் உறவினர்கள் சிலரை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக காரில் கன்னியாகுமரி ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு ரெயில் நிலைய வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

பின்னர் வந்து பார்த்த போது, காரை காணவில்லை. மர்மநபர்கள் காரை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தகராறு

இந்த நிலையில் நேற்று மதியம் 2 வாலிபர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு காரில் வந்தனர். அவர்களில் ஒருவர், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பணியாற்றும் ஊழியரிடம் கார் நிறுத்துவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகராறு நடந்த பகுதியை நோக்கி விரைந்து சென்றனர்.

போலீசாரை கண்டதும், அந்த வாலிபர்கள் 2 பேரும் திடீரென ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வாலிபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். மேலும், வாலிபர்களிடம் காரின் ஆவணங்கள் குறித்து கேட்டபோது, எந்தவொரு பதிலும் சொல்லவில்லை.

2 பேர் கைது

இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தென்தாமரைகுளம் தேங்காய்காரன் குடியிருப்பை சேர்ந்த அஜித் சார்லஸ் (21), சேர்ம துரை (19) என்பதும், கன்னியாகுமரி ரெயில் நிலைய வளாகத்தில் நிறுத்தியிருந்த பரமசிவனின் காரை திருடியவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் கடந்த வாரம் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் அவர்கள் திருடியுள்ளனர். அதே சமயத்தில் இருவர் மீதும் பல்வேறு திருட்டு வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அஜித் சார்லஸ், சேர்மதுரை ஆகிய 2 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கன்னியாகுமரி போலீசிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கார், மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டன.

Next Story