பழனி பகுதியில் குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட கலெக்டர்


பழனி பகுதியில் குடிமராமத்து பணிகளை பார்வையிட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 15 Sept 2019 5:00 AM IST (Updated: 15 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதியில் குடிமராமத்து பணிகளை நேற்று பார்வையிட்ட கலெக்டர் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தார்.

பழனி,

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், வாய்க்கால், குளம், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் குடிமராமத்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அந்தவகையில் நேற்று காலை பழனி பாப்பம்பட்டி அருகே உள்ள குதிரையாறு அணைக்கு வந்த கலெக்டர் விஜயலட்சுமி, அணையின் இடது பிரதான வாய்க்காலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பஞ்சந்தாங்கிகுளத்தில் ரூ.38 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குளத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என கேட்டறிந்தார்.

பின்னர் அய்யம்பாளையம் புதுக்குளத்தில் நடந்து வரும் தூர்வாரும் பணிகள், கரைகளை பலப்படுத்தும் பணிகளை பார்வையிட்டார். மேலும் ஆக்கிரமிப்புகள் ஏதேனும் இருந்தால் அவற்றை நில அளவீடு செய்து அகற்றிய பின் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும், வடகிழக்கு பருவமழைக்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து மானூர் செங்குளம், ஆயக்குடி தேவிநாயக்கன்குளம் ஆகிய குளங்களுக்கும் சென்று அங்கு நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பழனி தாசில்தார் பழனிச்சாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் காஞ்சித்துரை, உதவி பொறியாளர் மகேஷ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story