மளிகை கடையில் நூதன முறையில் ரூ.30 ஆயிரம் திருட்டு வெளிநாட்டு தம்பதிக்கு வலைவீச்சு


மளிகை கடையில் நூதன முறையில் ரூ.30 ஆயிரம் திருட்டு வெளிநாட்டு தம்பதிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Sept 2019 3:45 AM IST (Updated: 15 Sept 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே மளிகை கடையில் நூதன முறையில் ரூ.30 ஆயிரத்தை திருடி சென்ற வெளிநாட்டு தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் முகமதுசபியுல்லா(வயது32) என்பவர் மளிகை கடை வைத்து உள்ளார். இவரது கடைக்கு நேற்று மாலை 4 மணியளவில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு தம்பதி வந்தனர். மிகவும் மிடுக்காக டிப்- டாப் உடை அணிந்து இருந்த அவர்கள் மளிகை கடையில் இருந்த சபியுல்லாவிடம் பிளேடு வாங்கினர். பின்னர் அவர்கள் தங்கள் வெளிநாட்டில் இருந்து வந்து இருப்பதாகவும் தங்களிடம் வெளிநாட்டு பணம் உள்ளதாகவும் இதை எங்கு மாற்றலாம் என கேட்டனர். பின்னர் அவர்கள் சபியுல்லாவிடம் இந்திய பணத்தில் சி.எல். என்று போட்ட சீரியல் நம்பர் உள்ள பணம் உங்களிடம் உள்ளதா? என கேட்டனர். அப்போது சபியுல்லா தன்னிடம் அது போன்ற பணம் இல்லை என கூறினார்.

செல்பி

ஆனால் அந்த நபர் தங்களிடம் உள்ள பணத்தை காட்டுங்கள் நானே தேடி பார்க்கிறேன் என சபியுல்லாவிடம் ஆங்கிலத்தில் கேட்டார்.

இவர்களின் இந்த உரையாடல் நடைபெற்று கொண்டிருந்த போது வெளிநாட்டு நபருடன் வந்த பெண் அங்கு வந்த மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மக்களுடன் மக்களாக நின்று செல்பி எடுப்பது போல நடித்தார். அப்போது வெளிநாட்டு நபர் சபியுல்லாவிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் அடங்கிய ஒரு கட்டை வாங்கி பார்த்தார். அப்போது அவர் நைசாக அந்த கட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 15-ஐ எடுத்துக்கொண்டார். பின்னர் வெளிநாட்டு நபரும் அவருடன் வந்த பெண்ணும் தாங்கள் தேடிய பணம் உங்களிடம் இல்லை என கூறி விட்டு தூரத்தில் நின்ற காரில் ஏறி சென்று விட்டனர்.

வலைவீச்சு

அவர்கள் சென்ற பின் பணத்தை சரிபார்த்த சபியுல்லா ரூ.30 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளிநாட்டு தம்பதியை சபியுல்லா பல இடங்களில் தேடினார். ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் வெளிநாட்டு தம்பதி மளிகை கடைக்கு வந்தது முதல் அவர்கள் சென்றது வரை நடைபெற்ற அனைத்து காட்சிகளும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சபியுல்லா புகார் அளித்தார். மேலும் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற வெளிநாட்டு தம்பதியை தேடி வருகிறார்கள். 

Next Story