தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் நீதிமன்றத்தில் 1,760 வழக்குகளுக்கு சமரச தீர்வு


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் நீதிமன்றத்தில் 1,760 வழக்குகளுக்கு சமரச தீர்வு
x
தினத்தந்தி 14 Sep 2019 10:30 PM GMT (Updated: 14 Sep 2019 9:02 PM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,760 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

தர்மபுரி,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று நடைபெற்றது. தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கந்தகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

விபத்து வழக்குகள் தீர்ப்பாய மாவட்ட நீதிபதி சீதாராமன், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம், மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு நீதிபதி பரமராஜ், குடும்ப நல கோர்ட்டு நீதிபதி செல்வமுத்துக்குமாரி, தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், சார்பு நீதிபதி சாந்தி, மாவட்ட உரிமையியல் நீதிபதி சாந்தி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் ரகோத்தமன், செல்வராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி பாலு ஆகியோர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தினார்கள்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் அங்கு பணிபுரியும் நீதிபதிகள் மக்கள் நீதிமன்றத்தை நடத்தினார்கள். இதில் வழக்குதாரர்கள், வக்கீல்கள், வங்கி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விபத்து வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகள், தீர்வு காணக்கூடிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,001 வழக்குகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சத்து 33 ஆயிரத்து 355 தொகைக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. அதன்படி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஓசூர், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.

கிருஷ்ணகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான மீனாசதீஷ் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மகளிர் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கலாவதி, நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் அறிவொளி, சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மணி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி மற்றும் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள் மற்றும் தொழிலாளர் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீர்த்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1,910 வழக்குகள் பரிசீலனைக்காக எடுத்து கொள்ளப்பட்டன. அதில் 759 வழக்குகளுக்கு ரூ.7 கோடியே 73 லட்சத்து 89 ஆயிரத்து 506 மதிப்பில் தீர்வு காணப்பட்டன. தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான ஆணைகளை மாவட்ட முதன்மை நீதிபதி மீனாசதீஷ் வழங்கினார்.

Next Story