திருவண்ணாமலையில், போலீஸ் என்று கூறி பெண்ணிடம் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபருக்கு வலைவீச்சு


திருவண்ணாமலையில், போலீஸ் என்று கூறி பெண்ணிடம் நகை பறிப்பு - மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Sept 2019 3:30 AM IST (Updated: 15 Sept 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் போலீஸ் என்று கூறி பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், பிச்சாத்தூரை சேர்ந்தவர் சம்பூர்ணா (வயது 39). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு கிரிவலம் சென்றார்.

பின்னர் அவர், கிரிவலப்பாதை காஞ்சி சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவில் அருகே உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூம் முன்பு படுத்து தூங்கி உள்ளார். அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்தபடி வந்த நபர் தூங்கிக் கொண்டிருந்த சம்பூர்ணாவை எழுப்பி தன்னை போலீஸ் என்று கூறி உன்னை பார்த்தால் சந்தேகமாக உள்ளது என்று மிரட்டல் தோணியில் பேசியுள்ளார். மேலும் நீ அணிந்து இருப்பது திருட்டு நகையா? என்று கேட்டு உள்ளார்.

இதையடுத்து அவர், சம்பூர்ணாவை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி கிரிவலப்பாதையில் குபேர பெருமாள் கோவில் அருகில் உள்ள காலி இடத்தில் இறக்கிவிட்டு, அவர் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்துக்கொண்டு சென்று உள்ளார்.

இதுகுறித்து சம்பூர்ணா திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ‘ஹெல்மெட்’ அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியவில்லை என்றும், அவர் வந்த மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லாததும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story