சென்னையில் பெண் என்ஜினீயர் பலியான சம்பவம் எதிரொலி : இரவோடு இரவாக ‘பேனர்கள்’ அதிரடி அகற்றம் - பண்ருட்டியில் பரபரப்பு


சென்னையில் பெண் என்ஜினீயர் பலியான சம்பவம் எதிரொலி : இரவோடு இரவாக ‘பேனர்கள்’ அதிரடி அகற்றம் - பண்ருட்டியில் பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sept 2019 4:45 AM IST (Updated: 15 Sept 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பெண் என்ஜினீயர் பலியான சம்பவத்தை தொடர்ந்து பண்ருட்டியில் இரவோடு இரவாக ‘பேனர்கள்’ அதிரடியாக அகற்றப்பட்டது.

பண்ருட்டி,

சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் என்ஜினீயர் சுபஸ்ரீ என்பவர் மீது ‘பேனர்’ சரிந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ லாரியில் அடிப்பட்டு பலியானார். ‘பேனர்’ விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்படுவதாக சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ‘பேனர்’களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பண்ருட்டியில் நேற்று முன்தினம் இரவில் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையில் நகரமைப்பு அலுவலர் செல்வம், துப்புரவு அலுவலர் சக்திவேல், துப்புரவு ஆய்வாளர் ஆரோக்கியசாமி, திண்ணாயிரமூர்த்தி, குமார், தேவநாதன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ‘பேனர்களை’ அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி பண்ருட்டி 4 முனை சந்திப்பு, கடலூர் ரோடு, சென்னை சாலை, கும்பகோணம் சாலை, காந்திரோடு, ராஜாஜி சாலை, மற்றும் பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மற்றும் பெரிய அளவிலான ‘பேனர்கள்’ அகற்றப்பட்டன. அந்த வகையில் விடிய விடிய நடந்த இந்த பணியில் மொத்தம் 150 ‘பேனர்கள்’ அகற்றப்பட்டதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பண்ருட்டியில் நேற்று காலையும் அதிகாரிகளின் நடவடிக்கை தொடர்ந்தது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த திருமண விழா மற்றும் இதர விழாவுக்கான பேனர்களையும் அதிரடியாக கிழித்து அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story