கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் அதிகாரிகளுடன், விவசாயிகள் இணைந்து செயல்பட வேண்டும்


கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் அதிகாரிகளுடன், விவசாயிகள் இணைந்து செயல்பட வேண்டும்
x
தினத்தந்தி 14 Sep 2019 10:45 PM GMT (Updated: 14 Sep 2019 10:23 PM GMT)

கல்லணைக்கால்வாய் கடைமடை பாசன பகுதியில் ஒருபோக சாகுபடி நல்லமுறையில் நடைபெற அதிகாரிகளுடன் விவசாயிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பழனிமாணிக்கம் எம்.பி.கூறினார்.

பட்டுக்கோட்டை,

மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் உள்ளது. கல்லணைக்கால்வாயில் அதிகபட்சமாக 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கலாம். இருந்தாலும் 3 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறப்பது பாதுகாப்பானது அல்ல. 3 ஆயிரம் கன அடி திறந்துதான் முன்னுரிமை அடிப்படையில் கடைமடை பகுதிகளான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டை பொறுத்தவரையில் மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர், வேளாண்துறையினர், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் கடந்த 30 நாட்களாக நீர் நிர்வாகம் செய்து வருகிறார்கள். கல்லணைக்கால்வாயில் அதிக அளவில் தண்ணீர் திறக்கும்போது, அதிகமாக தண்ணீரை வாங்கக்கூடிய வாய்க்காலை திறந்தும், குறைவான அளவு தண்ணீர் திறக்கும்போது கடைமடை பகுதிகளுக்கு தண்ணீரை பாதுகாப்பாகவும் கொண்டு சேர்க்கிறார்கள்.

இணைந்து செயல்பட வேண்டும்

கடந்த 6, 7 ஆண்டுகளாக போதுமான மழை இல்லாத காரணத்தாலும், ஆற்றில் தண்ணீர் வராததாலும் நிலத்தடி நீர்மட்டம் 200 அடிக்கு கீழே போய்விட்டது. இதனால் வருகிற தண்ணீரும் வாய்க்கால்களில் நகர மறுக்கிறது. நல்ல வேலையாக இந்த பகுதியில் 15 நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இதை வைத்துக்கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் இணைந்து விவசாய சங்கத்தலைவர்களும் மற்றவர்களும் ஒருபோக சாகுபடியை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பொதுப்படையாக எல்லோரையும் விமர்சனம் செய்து சுவரொட்டிகள் ஒட்டுவதும், பத்திரிகைகளில் பேட்டி அளிப்பதும் வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்குமே தவிர விவசாயிகளுக்கு பயன் அளிக்காது. ஆகவே ஒருங்கிணைந்து நீர் நிர்வாகத்தை பயிர் பருவகாலத்தில் செய்து ஒருபோக சாகுபடியை வெற்றிகரமாக செய்திட வேண்டும். கோடையில் மீதி இருக்கிற தென்னைந்தோப்புகள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் தென்னந்தோப்புகளுக்கு நிலத்தடி நீர் கிடைப்பதற்கும், மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து ஒத்துழைத்து செயல்படுமாறு தொகுதி எம்.பி. என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

கல்லணைக்கால்வாய் மறுசீரமைப்பு

கல்லணைக்கால்வாய் மறுசீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆறு முழுவதும் தரையின் மேற்பரப்பில் அமைந்து இருப்பதால் ஆற்றின் இருகரைகளிலும், தரையிலும் நவீனப்படுத்தப்பட்டால்தான் கடைமடை பகுதிக்கு 4 ஆயிரம் கன அடி கொள்ளளவு நீர் சென்றடையும். ரூ.200 கோடி மதிப்பில் 50 சதவீத பணிகள், நான் எம்.பி.யாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்த காலத்தில் தலைவர் கலைஞர் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தது.

2011-ம் ஆண்டுக்கு பிறகு வந்த அரசு மீதமுள்ள 50 சதவீத வேலையை நிறைவேற்றி இருந்தால் இன்றைக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் மூலம் கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதிகளான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள் முழுமையான பாசனவசதி நிறைவடைந்து இருக்க முடியும். இந்த குறையை வருகிற ஆண்டாவது தீர்க்கிற வகையில் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அதற்கு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் தூண்டுகோலாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story