அவினாசி அருகே வேன்கள் நேருக்குநேர் மோதல்; குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்


அவினாசி அருகே வேன்கள் நேருக்குநேர் மோதல்; குழந்தை உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 16 Sept 2019 3:45 AM IST (Updated: 15 Sept 2019 9:41 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே சரக்கு வேனும், மற்றொரு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 34) காய்கறி வியாபாரி. இவர் தனது சரக்கு வேனில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு அவினாசி புதுப்பாளையம் பிரிவு அருகே முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

அப்போது புதுப்பாளையத்திலிருந்து அவினாசி நோக்கி ஆட்களை ஏற்றி வந்த வேனும் காய்கறிகளை ஏற்றி வந்த சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

வேனில் புதுப்பாளையத்தை சேர்ந்த நடராஜ் (64), பரமேஷ் (35), பரமேசின் பெண் குழந்தை பூஜிதா (3) ஆகியோர் இருந்தனர். வேனை பரமேஷ் ஓட்டி வந்தார். இதில் வேனில் இருந்த 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர்.

அப்போது பல்லடத்தில் இருந்து கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. அவினாசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்தில் காரை நிறுத்தி இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தையை உடனடியாக மீட்டு தனது காரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தார்.

மேலும் வேனில் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்திருந்த நடராஜ் மற்றும் பரமேஷ், சரக்கு வேனை ஓட்டி வந்த சிவராஜ் ஆகியோரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் சரக்கு வேன் மற்றும் ஆட்களை ஏற்றி வந்த வேனின் முன்பகுதி சேதம் அடைந்தது. விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story