காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில்: அத்திவரதர் சிலை வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளம் நிரம்புகிறது
x
தினத்தந்தி 16 Sept 2019 4:30 AM IST (Updated: 15 Sept 2019 9:43 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அத்திவரதர் சிலை வைக்கப்பட்ட அனந்தசரஸ் குளம் நிரம்பி வருகிறது. இதை ஏராளமான பக்தர்கள் கூட்டமாக வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை 48 நாட்களுக்கு நடைபெற்றது.

இதில், சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் பல வண்ண உடைகளில் காட்சியளித்த அத்திவரதரை ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். விழா நிறைவு பெற்றதும் கோவில் வளாகத்தில் அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் பல வேத மந்திரங்களுடன் அத்திவரதர் சிலை சயனகோலத்தில் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் காஞ்சீபுரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் அத்திவரதர் அனந்த சயனத்தில் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி வருகிறது. இதனை ஏராளமான பக்தர் கள் நேரில் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.

சில பக்தர்கள் கோவில் வளாகத்தில் 48 நாட்கள் அத்திவரதர் வைக்கப்பட்ட வசந்த மண்டபத்தை தரிசித்து செல்கின்றனர்.

அனந்தசரஸ் குளத்தில் மொத்தம் 24 படிக்கட்டுகள் உள்ளன. மழை காரணமாக இதுவரை 8 படிக்கட்டுகள் மூழ்கி காணப்படுகிறது.

தினந்தோறும் இக்கோவிலுக்கு வரதராஜ பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்ய தமிழகம் மற்றும் ஆந்திராவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதன் காரணமாக அனந்தசரஸ் திருக்குளம், கோவில் நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story