கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் மூடப்பட்ட புறகாவல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை


கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் மூடப்பட்ட புறகாவல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:30 PM GMT (Updated: 15 Sep 2019 4:24 PM GMT)

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமில் மூடப்பட்ட புறகாவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என இலங்கை தமிழர் அகதிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள இந்த திறந்த வெளி முகாம், கடந்த ்1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் மிகப்பெரிய முகாமான இந்த முகாமில், தற்போது 915 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 810 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். இந்த நிலையில், முகாமின் செயல்பாடுகளை கண்டறியவும், அங்கு வசித்து வரும் தமிழர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முகாமிலேயே மாவட்ட போலீஸ் நிர்வாகம் மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த புறக்காவல் நிலையம் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் நிலையத்தின் கட்டுபாட்டில் இயங்கி வந்தது.

முகாமிற்கு உரிய அனுமதியின்றி புதிதாக வந்து செல்வர்கள் யார்? யார்? அவர் களின் பின்னணி என்ன? முகாமில் பதிவில்லாமல் வெளியாட்கள் யாரும் தங்கி உள்ளனரா? முகாமிற்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரவு நேரங்களில் வாகனங்கள் ஏதேனும் வந்து செல்கிறதா? என்பதை கண்டறிவதற்கும், முகாமில் அடிக்கடி ஏற்படும் சிறு சிறு தகராறுகள் குறித்து விசாரணை நடத்தி பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் வகையில் இந்த புறகாவல் நிலையம் செயல்பட்டு வந்தது.

இதையடுத்து, இந்த புறகாவல் நிலையம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மூடப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் முகாமில் ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும், புதிய ஆட்களின் நடமாட்டம் இருந்தாலும் அவற்றை முறையாக கண்டறிவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

இதனால் தொடர்ந்து பல சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மாவட்ட கியூ பிரிவு போலீசார் தினமும் முகாமை நேரடியாக வந்து கண்காணித்து வந்தாலும், முகாமிற்காக அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வந்த புறகாவல் நிலையம் மூடப்பட்டதால், பல்வேறு வழிகளில் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு முகாம் தமிழர்கள் தள்ளப்பட்டு வருவதாக புகார் எழுந்து உள்ளது. எனவே தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள இந்த பெரிய திறந்த வெளிமுகாமில் முகாம் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் மூடப்பட்ட புறகாவல் நிலையத்தை மீண்டும் திறந்திட வேண்டும் என்பதே அங்கு வசித்து வரும் இலங்கை தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story