பெரம்பலூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்து நாசம் முன்னாள் ராணுவ அதிகாரி, மனைவியுடன் உயிர் தப்பினார்


பெரம்பலூர் அருகே கார் தீப்பிடித்து எரிந்து நாசம் முன்னாள் ராணுவ அதிகாரி, மனைவியுடன் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 4:30 PM GMT)

பெரம்பலூா் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் அதிர்‌‌ஷ்டவசமாக முன்னாள் ராணுவ அதிகாரி, மனைவியுடன் உயிர் தப்பினார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே துறைமங்கலத்தை சேர்ந்தவர் சிங்காரம்(வயது 73). முன்னாள் ராணுவ அதிகாரியான இவர், நேற்று திருச்சியில் நடைபெறும் திருமண விழாவிற்கு செல்வதற்காக மருமகளின் பெற்றோர் காரில் தனது மனைவி விஜயாவுடன்(65) துறைமங்கலத்தில் இருந்து காலை 11.30 மணியளவில் புறப்பட்டார். காரை சிங்காரம் ஓட்ட, பின்னால் இருக்கையில் அவரது மனைவி அமர்ந்திருந்தார். துறைமங்கலம் பங்களா பஸ் நிறுத்தம் அருகே கார் சென்றபோது, அதன் முன்புற பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை வெளியேறியதை கண்ட சிங்காரம் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் காரை அவசர, அவசரமாக சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, காரில் இருந்த மனைவி விஜயாவை அழைத்து கொண்டு வேகமாக இறங்கினார். பின்னர் அவர் காரில் இருந்து வெளியேறிய புகையை கட்டுப்படுத்த முயன்றார்.

தீப்பிடித்து எரிந்தது

இருப்பினும் எதிர்பாராதவிதமாக கார் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. பின்னர் மளமளவென தீ பரவியதால் காரில் பெரும்பாலான பகுதி எரிந்து நாசமானது. கார் தீப்பிடித்து எரிந்ததால் பெரம்பலூர்- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தாமோதரன், தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து 20 நிமிடம் போராடி தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்து எரிவதற்கு முன்னதாகவே காரில் இருந்து இறங்கியதால் சிங்காரமும், அவரது மனைவி விஜயாவும் அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர். கார் தீப்பிடித்தது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story