இலுப்பையூரில் பயங்கரம்: டாஸ்மாக் கடை அருகே இரட்டைக் கொலை


இலுப்பையூரில் பயங்கரம்: டாஸ்மாக் கடை அருகே இரட்டைக் கொலை
x
தினத்தந்தி 15 Sep 2019 10:15 PM GMT (Updated: 15 Sep 2019 6:41 PM GMT)

இலுப்பையூரில் டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட தகராறில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னம்,

அரியலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 38). இவர் திருமணமாகி குடும்பத்தினருடன் தனது மாமனார் ஊரான பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நல்லறிக்கை கிராமத்தில் வசித்து வந்தார். மேலும் இவர் நல்லறிக்கை கிராமத்தில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஆனந்தன் மாலையில், அதே கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவாங்கி கடைக்கு அருகே அமர்ந்து அருந்தி கொண்டிருந்தார்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சண்முகம்(40) என்பவரும் வந்து மது அருந்தி கொண்டிருந்தார். அளவுக்கு அதிகமாக குடிபோதையில் இருந்த ஆனந்தனுக்கும், சண்முகத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பானது.

கொலை

இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரத்தில் ஆனந்தன், கீழே கிடந்த கத்தியை எடுத்து சண்முகத்தை சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகம் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சண்முகத்தின் உறவினர்கள் சிலர் ஆனந்தனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆனந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சண்முகத்தை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சண்முகமும் உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவலறிந்ததும் மங்களமேடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன் தலைமையில், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மாலதி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து, ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சண்முகம், ஆனந்தன் ஆகிய 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இறந்து போன ஆனந்தனுக்கு சத்தியபிரியா என்ற மனைவியும், தர்ஷினி(12) என்ற மகளும், வெற்றி (8) என்ற மகனும் உள்ளனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கொலையான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சண்முகத்தின் உறவினர்கள் சிலரை பிடித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story