பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலி: அ.தி.மு.க. பிரமுகர் 2-வது குற்றவாளியாக சேர்ப்பு


பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலி:  அ.தி.மு.க. பிரமுகர் 2-வது குற்றவாளியாக சேர்ப்பு
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 6:55 PM GMT)

பேனர் விழுந்து பெண் என்ஜினீயர் பலியான வழக்கில், அ.தி.மு.க. பிரமுகரை 2-வது குற்றவாளியாக சேர்த்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் சுபஸ்ரீ (வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 12-ந் தேதி பணி முடிந்து ஸ்கூட்டரில் பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் சென்றபோது, சாலையின் நடுவில் இருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக, சுபஸ்ரீயின் தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி டிரைவர் மனோஜ் (25) என்பவரை கைது செய்தனர். மேலும் அந்த புகாரில் ரவி, விபத்துக்கு காரணமான பேனர் வைத்த அ.தி.மு.க. பிரமுகர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருந்தார்.

இதையடுத்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இந்த வழக்கில் கைதான லாரி டிரைவர் மனோஜ் முதல் குற்றவாளியாகவும், 2-வது குற்றவாளியாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

ஏற்கனவே அனுமதி இன்றி பேனர் வைத்ததாக மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின் பேரில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் மீது பொது இடத்தில் அனுமதி இன்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

தற்போது பள்ளிக்கரணை மற்றும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளிலும் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபாலை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

Next Story