பொது இடங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்


பொது இடங்களில் பேனர்கள் வைக்கக்கூடாது போலீஸ் அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 7:07 PM GMT)

பொது இடங்களில் பேனர்கள் வைக்கக் கூடாது என ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா அறிவுறுத்தி உள்ளார்.

ஆலங்குடி,

தமிழகத்தில் சுப நிகழ்ச்சிகள் என்றாலும், துக்க நிகழ்ச்சிகள் என்றாலும் ‘டிஜிட்டல்’ பேனர்கள் பிரதான இடம் பெறுகின்றன. குறிப்பாக அரசியல் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏராளமான பேனர்கள் வைக்கப்படுகின்றன. இந்த பேனர்கள் சில சமயம் சரிந்து அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்து விடுகின்றன. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண் என்ஜினீயர் ஒருவர் மீது பேனர் ஒன்று விழுந்ததில் அந்த பெண் சாலையில் விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று அந்த பெண் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

இதன்காரணமாக தமிழகத்தில் பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பாக, டிஜிட்டல் பேனர் தொழில் நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக் கூடாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பேனர்கள் வைக்க விரும்பினால், பேரூராட்சியில் மனு கொடுத்து, அதற்குரிய கட்டணத்தை கட்ட வேண்டும்.

அந்த ரசீது அடிப்படையில் பேனர் வைக்க குறிப்பிட்ட இடத்தில் அனுமதி வழங்கப்படும். போலீசாரின் அனுமதி பெற்று பேனர்களை தயாரிக்க வேண்டும். அதில் பிளக்ஸ் தொழில் நடத்தும் நிறுவனத்தின் பெயர், போலீசாரின் அனுமதி எண் குறிப்பிட்டிருக்க வேண்டும். பேனர் வைப்பவர்கள், போலீசார் அனுமதித்த இடத்தில்தான் வைக்க வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்காணிப்பு கேமிராக்கள்

மண்டப உரிமையாளர்கள், மண்டபத்தின் பக்கவாட்டிலும், முன்புறத்திலும், சுமார் 25 மீட்டர் தொலைவு வரை காட்சிகளை பதிவு செய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அலாவுதீன்(ஆலங்குடி), பாலசுப்பிரமணியன்(கறம்பக்குடி), போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story