பேனர்களை அகற்றாத நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பதவிநீக்கம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை


பேனர்களை அகற்றாத நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பதவிநீக்கம் - முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Sept 2019 5:00 AM IST (Updated: 16 Sept 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

பேனர்களை அகற்றாத கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார். இந்தியா பல மதங்கள், மொழிகள் மற்றும் கலாசாரங்களை ஒருங்கிணைத்து உள்ள நாடு. பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், ஒடிசா, மராட்டியம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநிலங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த மொழியில்தான் பேசுகின்றனர். மேலும் படிப்பதும், எழுதுவதும்கூட தங்கள் மொழிகளில்தான். ஆங்கிலம் முதன்மையான மொழியாக உள்ள இந்த நேரத்தில் மத்திய மந்திரியின் கருத்து இந்தி படிக்காத மக்களிடையே திணிப்பதாக உள்ளது. ஆகவேதான் தமிழகம், புதுச்சேரியில் இதற்கு பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்தி திணிப்பு முயற்சி நடக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை அவர்கள் மக்களிடம் திணிக்கின்றனர்.

புதிய கல்விக் கொள்கையை அறிவிக்கும் போது இந்தி மற்றும் இணைப்பு மொழியாக ஆங்கிலம் என்றும் வலியுறுத்தி இருந்தனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், நாடாளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் மும்மொழி கொள்கையே ஏற்கப்பட்டது. அடுத்து தபால் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. அதில் ஆங்கிலம், இந்தியில் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கும் தமிழகம், புதுச்சேரியில் எதிர்ப்பு தெரிவித்ததுடன், நீதிமன்றத்துக்கும் செல்லப்பட்டது. அதன் பிறகு அது கைவிடப்பட்டது. தற்போது 3-வது முறையாக அனைத்து மாநிலங்களிலும் இந்திதான் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்தி மொழிக்கு எதிர்ப்பு அல்ல, இந்தி மொழியை திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். எனவே மத்திய உள்துறை மந்திரி தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும்.

சென்னையில் சுபஸ்ரீ என்ற பெண் பேனர் சரிந்து விழுந்ததால், கீழே விழுந்து லாரி விபத்தில் இறந்துள்ளார். புதுச்சேரியில் பேனர் தடை செய்யப்பட்டு இருந்தாலும் அரசியல்வாதிகள் மற்றும் பிறந்தநாள், திருமண நாள் விழாக்களுக்கு பெரிய அளவில் பேனர் வைக்கின்றனர். இந்த பேனர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

சென்னையில் சுபஸ்ரீ இறந்தவுடன் புதுச்சேரியில் உள்ள அனைத்து பேனர்களையும் எடுக்க தலைமை செயலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள பேனர்களை மக்களே அகற்றவேண்டும் இல்லையெனில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் அதனை அகற்றிவிட்டு பேனர் வைத்தவர்களிடம் பணம் வசூலிக்க வலியுறுத்தியுள்ளேன். நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் இந்த உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என்றால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.

பேனர் வைப்பதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட இடங்கள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு கருதி அனுமதி கொடுத்துள்ள இடத்தை மறுபரிசீலனை செய்யும் கட்டாயத்தில் அரசு உள்ளது. மத்திய அரசு அனுமதி பெற்று தேசிய நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர் களுக்கு காப்பீடு செய்திருக்க வேண்டும். இல்லையெனில் அனுமதி ரத்து செய்யும் நிலை ஏற்படும்.

ஒட்டுமொத்தமாக புதுச்சேரி நகரம் அழகாக இருக்க பேனர் கலாசாரம் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர் களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். புதுச்சேரியில் பேனர் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அமைச்சரவை கூடி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story