இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது - பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 15 Sep 2019 11:30 PM GMT (Updated: 15 Sep 2019 7:45 PM GMT)

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் பேசினார்.

திருப்பூர்,

திருப்பூரில் தே.மு.தி.க. சார்பில் முப்பெரும் விழா நேற்று இரவு நடந்தது. விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

திருப்பூரில் இன்று(நேற்று) நடக்கும் முப்பெரும் விழா ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்காக நிர்வாகிகள் பேனர், கட்-அவுட்டுகளை சொந்த செலவில் மாநகரில் வைத்திருந்தனர். ஆனால் அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக அந்த பேனர், கட்-அவுட்டுகளை எடுத்து ரோட்டில் வீசியதாக சொன்னார்கள். கோர்ட்டு உத்தரவை மதிக்கும் கட்சி தே.மு.தி.க., நாங்கள் எப்போதும் சட்டத்தை மதிக்கிறோம். அதனால் ரோட்டோரம் வைத்திருந்த பேனர், கட்-அவுட்டுகளை எடுத்து இந்த விழா மைதானத்தில் வைத்திருக்கிறார்கள்.

அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழியை கற்போம் என்பதே நம் கோட்பாடு. தமிழ் தான் எங்கள் உயிர் மூச்சு. தமிழகத்தில் தமிழ் மொழி தான் முதன்மை மொழி. தாய்மொழியான தமிழ் மொழியை காப்போம். மற்ற மொழியையும் கற்போம் என்பதே எங்கள் நிலைபாடு.

ஆவின் பொருட்களின் விலை உயர்வை பரிசீலனை செய்வதுடன் இனியும் விலை உயராமல் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். நீரை சேமித்து வருங்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமை. மழைநீரை அனைவரும் சேகரிக்க வேண்டும்.

பின்னலாடை, நெசவு தொழில், சிறு, குறு தொழில்களை காப்பாற்றும் வகையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் தே.மு.தி.க. வலியுறுத்தும். தமிழக முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை பெற்று வந்துள்ளார். இதனால் 38 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பை பெருக்கினால் மக்கள் வளமாக வாழ முடியும். சுங்க கட்டண வசூல் கொள்ளையை தே.மு.தி.க. அனுமதிக்காது. பிரதமரிடம் இதுதொடர்பாக வலியுறுத்தப்படும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பா.ஜனதாவின் 100 நாள் ஆட்சி ஏமாற்றமா? ஏற்றமா? என்று விவாதிக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் இதுவரை ஆண்ட பின்பும் நாட்டுக்கு ஊழலை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை என்பதை எதிர்க்கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

50 ஆண்டு கால அரசியலில் இருந்தவர், 8 முறை பட்ஜெட் போட்ட ப.சிதம்பரம் இப்போது திகார் ஜெயிலில் இருக்கிறார். உப்பை தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இன்று அவர் ஜாமீன் கேட்கிறார். தமிழக மக்கள் வெட்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீண்ட, நெடிய தூக்கத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் இப்போது தான் விழித்துள்ளார். இனிமேல் பேனர் வைக்கும் விழாக்களுக்கு நான் செல்ல மாட்டேன் என்று அறிக்கையை அவர் கொடுக்கிறார். பேனர் கலாசாரத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்ததே தி.மு.க. தான் என்பதை மறுக்க முடியுமா?. அ.தி.மு.க. பேனர் விழுந்து இளம்பெண் இறந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்..

தே.மு.தி.க. எப்போது கட்சியை ஆரம்பித்ததோ அதில் இருந்து தி.மு.க. தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். இருந்தவரைக்கும் தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. அதுபோல் தே.மு.தி.க. ஆரம்பித்த பிறகு தி.மு.க.வால் ஆட்சிக்கு வரவே முடியாது. இனியும் வர முடியாது என்று உறுதியாக நான் கூறுகிறேன்.

தமிழகத்தில் இருப்பவர்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உங்கள் தந்தையோ உங்களுக்கு ஸ்டாலின் என்று வைத்தார். ரெட் ஜெயண்ட் என்று சினிமா நிறுவனத்துக்கு பெயர் வைத்த நீங்கள் இன்று மக்களுக்கு அறிவுரை சொல்கிறீர்கள். முதலில் நீங்கள் நல்ல உதாரணமாக இருந்து விட்டு மற்றவர்களுக்கு சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

விஜயகாந்த் தனது மகன்களுக்கு விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் என்று தமிழில் பெயர் வைத்தவர். எதிர்க்கட்சி தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை விஜயகாந்த்தை பார்த்து மு.க.ஸ்டாலின் கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் முப்பெரும் விழா நடத்தினால் எங்களை பார்த்து திருவண்ணாமலையில் முப்பெரும் விழா என்று தி.மு.க. நடத்துகிறது. நம்மை பார்த்து மற்ற கட்சிகள் காப்பி அடிக்கிறார்கள்.

ஈழ படுகொலைக்கு காரணமான தி.மு.க. இன்று நீலிக்கண்ணீர் வடிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பேனர் வைத்தால் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக சொல்கிறார்கள். அண்ணாவின் 111-வது பிறந்தநாளில் தி.மு.க. மிகப்பெரிய அபாயத்தில் மாட்டியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசப்பட்டு என்.ஐ.ஏ. அபாயத்தில் இன்று தி.மு.க. கட்சி, தடை செய்யப்பட வேண்டிய கட்சியாக இருக்க போகிறதோ என்று ஒட்டுமொத்த இந்தியர்களால் பேசப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வரலாறு என்ன என்று தெரியாதவர்களை விவாதத்துக்கு அனுப்ப வேண்டியது. வாய்க்கு வந்தபடி பேச வேண்டியது. காஷ்மீர் இந்தியாவின் அங்கம் இல்லை என்று தி.மு.க.வை சேர்ந்தவர் சொல்கிறார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய தி.மு.க.வை தடை செய்வதை யாரும் தடுக்க முடியாது என்ற அபாய நிலையில் தி.மு.க. உள்ளது.

மு.க.ஸ்டாலின் இப்போது அடக்கி வாசிக்கிறார். ப.சிதம்பரத்தை ஜெயிலில் போட்டு விட்டார்கள். எந்த நேரத்திலும் நமக்கும் வரும் என்று உணர்ந்ததால் மு.க.ஸ்டாலின் வாய்மூடி மவுனமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாவின் 111-வது பிறந்த நாள், தி.மு.க.வுக்கு பட்டை நாமம் போடக்கூடிய நாளாக அமையும் என்ற தருணம் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. தே.மு.தி.க. சார்பாக உள்ளாட்சியில் அமோக இடங்களை வெல்ல வேண்டும். அதற்கு நீ்ங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பகவத்கீதையில் கூறியதைப்போல் வஞ்சகம், சூழ்ச்சிகளை மன உறுதியுடன் எதிர்கொள்கிறாரோ, அந்த மனிதர் வெற்றித்தலைவனாக இருப்பார் என்கிறது. அதுபோல் தமிழகத்தை ஆட்சி செய்யும் தலைவராக விஜயகாந்த் இருப்பார். விஜயகாந்த் தலைமையில் ஆட்சி மலர்ந்தே தீரும். தே.மு.தி.க. எழுச்சி பெற்று மீண்டும் பெரிய சக்தியாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் திருப்பூர் மாநகர 53-வது வட்ட செயலாளர் பாண்டியன், நிர்வாகி விஜயகுமார் மற்றும் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, வார்டு, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசும்போது, உதயநிதி ஸ்டாலினை போல் தே.மு.தி.க.வில் இளைஞரணி செயலாளர் பதவி எனக்கு வழங்கப்படுமா? என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு விஜயகாந்தின் மகன் என்ற பொறுப்பு ஒன்றே போதும். அதை காப்பாற்றுவதே எனது நோக்கம். உதயநிதி ஸ்டாலினோடு என்னை ஒப்பிடாதீர்கள். அவருக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது. எனக்கு இன்னும் 30 வயது கூட தாண்டவில்லை. தே.மு.தி.க.வின் தொண்டனாக, உங்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். விஜயகாந்த் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார். அனைவரும் இதற்காக கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள். புது எழுச்சியோடு தே.மு.தி.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார்.

Next Story