நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தல் மயிலாடுதுறை அருகே பரபரப்பு


நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தல் மயிலாடுதுறை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 15 Sep 2019 10:15 PM GMT (Updated: 15 Sep 2019 8:11 PM GMT)

மயிலாடுதுறை அருகே நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குத்தாலம்,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 26 வயது பட்டதாரி பெண் ஒருவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு அந்த பெண் ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

இரவு 9 மணி அளவில் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு கார், ஸ்கூட்டரின் குறுக்கே வந்து நின்றது. அந்த காரில் வந்த மர்ம நபர்கள், அந்த பெண்ணை குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றியது. அப்போது அந்த பெண் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது அந்த கும்பல் பெண்ணை காரில் கடத்தி சென்று விட்டது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பெரம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் பெண் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணி அளவில் கடத்தப்பட்ட பெண் தனது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, கடத்தி சென்றவர்கள் தன்னை திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றதாக கூறி உள்ளார்.

இந்தியில் பேச்சு

இதையடுத்து பெண்ணின் தந்தை போலீசாருடன், கடத்தப்பட்ட இடத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கங்களாஞ்சேரிக்கு சென்று மகளை மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கடத்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் கார் டிரைவர் உட்பட 4 பேர் சேர்ந்து பெண்ணை கடத்தியதாகவும், காரில் இருந்தவர்கள் இந்தி பேசியதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை காரில் கடத்தியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் என்ன காரணத்துக்காக பெண்ணை கடத்தினார்கள்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நிதிநிறுவன பெண் ஊழியர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story