தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

மினி மாரத்தான் போட்டி

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தேசிய ஊட்டச்சத்து மாதம், குடிமராமத்து பணிகள் நீர் மேலாண்மை திட்டம், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினிமாரத்தான் போட்டி நேற்று தொடங்கியது.

இந்த போட்டியை கலெக்டர் ஷில்பா தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

குடிமராமத்து பணிகள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அங்கன்வாடி பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட சுமார் 1,000 பேர் இந்த மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மினி மாரத்தான் ஓட்டம் வள்ளியூர் கலந்தபனையில் நிறைவு பெறுகிறது. செல்லும் கிராமங்களில் மழை நீர் சேகரிப்பு, குடி மராமத்து பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மரக்கன்றுகள்

பொதுமக்கள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும். சத்தான உணவுகளை அங்கன்வாடி மையங்களில் பெற்று குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா பேசினார்.

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, பாளையங்கோட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story