மத்தூரில் ஒரே நாளில் துணிகரம்: 6 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு - மேலும் 3 கடைகளில் மர்ம நபர்கள் திருட முயற்சி
மத்தூரில் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் 6 கடைகளில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர். மேலும் 3 கடைகளில் திருட முயற்சி நடந்துள்ளது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையத்தில் மாவட்ட வளர்ச்சி குழும வணிக வளாக கட்டிடங்களில் 10-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. நள்ளிரவு வரையில் பொதுமக்கள் நடமாட்டம் இங்கு காணப்படும். மேலும் இந்த பகுதியில் உயர்மின் கோபுர விளக்கும் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் இங்குள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடைகளில் இருந்த பொருட்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றனர்.
இதில் ஜெயக்குமார் (வயது 48), குமார் ஆகியோரின் மருந்து கடைகளிலும், மாதவராஜன் (50) என்பவரின் உரக்கடையிலும், சாம்ராஜ் (52), புதூர் பெருமாள் (45) ஆகியோரின் மளிகை கடைகளிலும் திருட்டு நடந்துள்ளது. இந்த 5 கடைகளிலும் பூட்டுக்களை கடப்பாரையால் உடைத்து திறந்த மர்ம நபர்கள் சாம்ராஜ் மளிகை கடையில் கல்லா பெட்டியில் இருந்த ரூ.53 ஆயிரத்தையும், 4 சிகரெட் பண்டல்களையும், செல்போன்களையும் திருடிச் சென்றனர். மேலும் சில்லரையாக வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதேபோல மற்றொரு மளிகை கடையில் கல்லா பெட்டியில் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்கள். மத்தூர் சின்ன ஏரியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளின் பூட்டையும், பாரின் பூட்டையும் உடைத்து மர்ம நபர்கள் பணத்தை தேடி உள்ளனர். ஆனால் கடையில் பணம் இல்லாததால் திருட்டு தவிர்க்கப்பட்டது.
மேலும் தர்மபுரி பைபாஸ் பகுதியில் பாஸ்கர் என்பவரின் பேக்கரி கடையிலும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருட முயன்றனர். மத்தூரில் ஒரே நாளில் 6 கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவத்தால் வணிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்தூர் அனைத்து வணிகர் சங்க பொருளாளர் மாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று கடைகளில் திருடியவர்களை கைது செய்ய வலியுறுத்தி மனு கொடுத்தனர். அப்போது போலீசார் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் குழுக்களாக சுற்றித்திரியும் வட மாநில இளைஞர்களை கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த திருட்டு குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தொடர் திருட்டு சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story