ஒகேனக்கல் காவிரி ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி


ஒகேனக்கல் காவிரி ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
x
தினத்தந்தி 15 Sep 2019 10:45 PM GMT (Updated: 15 Sep 2019 9:29 PM GMT)

ஒகேனக்கல் காவிரி ஆற்று உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தர்மபுரி, 

தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகபடியான தண்ணீர் செல்கிறது. இந்த உபரிநீரை நீரேற்றத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு மக்களுக்கான எந்த திட்டத்தையும் தாமதப்படுத்தாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக ஒகேனக்கல் உபரிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கு ஓய்வு பெற்ற பொறியாளர்களை கொண்டு ஆய்வு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஒகேனக்கல் மலைப்பகுதியில் குழாய்கள் கொண்டு வருவதற்கு வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தை நிறைவேற்ற வனத்துறையிடம் மீண்டும் அனுமதி பெற தேவையில்லை. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து உபரிநீரை நீரேற்றம் செய்து மடம் அருகில் உள்ள கெண்டேயனஅள்ளி ஏரிக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கான நிதி உதவிகள் பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

தர்மபுரி-மொரப்பூர் இடையே ரெயில்பாதை இணைப்பு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலங்கள் தற்போது கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் நிலங்கள் கையகப்படுத்தும் பணிக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும். ரெயில்வே துறைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி இந்த திட்டத்திற்காக ஒப்படைக்க தமிழக அரசும், தர்மபுரி மாவட்ட நிர்வாகமும் எப்போதும் தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அப்போது பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story