ஏற்காட்டில், பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை - நிலப்பிரச்சினையில் உறவினர் வெறிச்செயல்


ஏற்காட்டில், பா.ஜனதா பிரமுகர் வெட்டிக்கொலை - நிலப்பிரச்சினையில் உறவினர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 9:29 PM GMT)

ஏற்காட்டில் நிலப்பிரச்சினையில் பா.ஜனதா பிரமுகரை அவருடைய உறவினர் வெட்டிக்கொலை செய்தார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஏற்காடு, 

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா நாகலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொளகூர் கிராமத்தை சேர்ந்தவர் அலவராக்கவுண்டர் மகன் சின்ராஜ் (வயது 45). விவசாயி. பா.ஜனதா ஏற்காடு ஒன்றிய துணைத்தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.

இவருடைய சித்தப்பா சென்றாயக்கவுண்டர் இறந்த பின்னர் அவருடைய நிலத்தை சென்றாயக்கவுண்டரின் 2 சகோதரிகள் மற்றும் சகோதரர் அலவராக்கவுண்டர் ஆகியோருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.

அலவராக்கவுண்டர் இறந்த பின்னர் அவருடைய நிலத்தின் பாகம் சின்ராஜின் தாயார் கரியம்மாள் பெயருக்கு மாறுதல் ஆனது. ஆனாலும் கரியம்மாள் நிலத்தை சின்ராஜின் அத்தை வெள்ளையம்மாளின் மகன் ராமகிருஷ்ணன் பயன்படுத்தி வந்தார்.

கரியம்மாளின் மகன்கள் தங்கள் நிலத்தை ராமகிருஷ்ணனிடம் இருந்து மீட்டு தரும்படி ஊர் பெரியவர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து நேற்று காலை கொளகூர் கிராம பிள்ளையார் கோவில் திடலில் ஊர் மக்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கரியம்மாளுக்கு சொந்தமான நிலத்தை அவர்களது வாரிசுகளிடம் ஒப்படைக்கும்படி ராமகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். அதற்கு ராமகிருஷ்ணன் ஒப்புக்கொண்டார்.

இதன்பின்னர் மதியம் கொளகூரில் உள்ள ஒரு டீக்கடையில் சின்ராஜ் உட்கார்ந்து இருந்தார். அப்போது ராமகிருஷ்ணனின் மகன் விவசாயி மணிகண்டன் (25) அங்கு வந்தார். திடீரென அரிவாளால் சின்ராஜின் தோள், கை, முகம், பின் மண்டை ஆகிய பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் சின்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். நிலப்பிரச்சினையில் வெறிச்செயலில் ஈடுபட்ட மணிகண்டன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொலை குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட சின்ராஜிக்கு லட்சுமி என்ற மனைவியும், ஜெயப்பிரியா என்ற மகளும், சேதுபதி என்ற மகனும் உள்ளனர். ஜெயப்பிரியா கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சேதுபதி 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நிலப்பிரச்சினையில் பா.ஜனதா பிரமுகர் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story