கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வீடுகளில் அதிரடி சோதனை; பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல்
ஆத்தூர், தலைவாசல் பகுதிகளில் கேபிள் டி.வி.ஆபரேட்டர்களின் வீடுகளில் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கு வழங்காமல் பதுக்கி வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் கேபிள் டி.வி.நிறுவனம் மூலம் கேபிள்.டிவி.ஆபரேட்டர்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. அவைகள் பொதுமக்களின் வீடுகளில் பொருத்தப்பட்டு கேபிள் இணைப்பு மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இலவச செட்டாப் பாக்ஸ்களை கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் சிலர் கேபிள் இணைப்பு உள்ள வீடுகளுக்கு கொடுக்காமல் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் சேலம் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து கலெக்டரின் உத்தரவுபடி சேலம் அரசு கேபிள் டி.வி.தனி தாசில்தார் முத்துராஜா தலைமையில் மாவட்ட அரசு கேபிள் சிக்னல் வினியோகஸ்தர் காதர்கான் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் நேற்று ஆத்தூர், மஞ்சினி, தலைவாசல், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.ஆபரேட்டர்களின் வீடுகளில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, சிலரின் வீடுகளில் தமிழக அரசின் இலவச செட்டாப் பாக்ஸ்கள் அட்டை பெட்டிக்குள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கேபிள் இணைப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு வழங்காமல் வைத்திருந்த 500-க்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட கேபிள் டி.வி.ஆபரேட்டர்களை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
இதுகுறித்து தனி தாசில்தார் முத்துராஜா கூறுகையில், பொதுமக்களுக்கு வழங்காமல் இலவச செட்டாப் பாக்ஸ்களை பதுக்கி வைத்திருக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அவர்களது உரிமம் ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதேபோல், அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே மக்களிடம் அரசு கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் வசூலிக்க வேண்டும். அதைவிட கூடுதல் தொகை வசூலிப்பது தெரியவந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
Related Tags :
Next Story