அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


அரசு பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 Sep 2019 10:45 PM GMT (Updated: 15 Sep 2019 9:29 PM GMT)

கன்னிவாடி அருகே அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.

கன்னிவாடி, 

திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 23). வடமதுரை அருகே உள்ள மொட்டணம்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. இவர்கள், திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். நேற்று இவர்கள் கன்னிவாடி அருகே உள்ள ஸ்ரீராமபுரத்தில் நடந்த நண்பரின் திருமண விழாவுக்கு சென்றனர்.

பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை கார்த்தி ஓட்டினார். கன்னிவாடி-ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஆண்டரசன்பட்டி புதுபாலம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றனர்.

அப்போது தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பஸ்சின் அடியில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் கார்த்தி, கருப்புச்சாமி ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இதில் கருப்புச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு போராடிய கார்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story