இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது “கடைசி தமிழன் இந்த மண்ணில் இருக்கும் வரை நிச்சயமாக ஓயாது” - கனிமொழி எம்.பி. பேச்சு


இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது “கடைசி தமிழன் இந்த மண்ணில் இருக்கும் வரை நிச்சயமாக ஓயாது” -  கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 16 Sept 2019 4:45 AM IST (Updated: 16 Sept 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

“இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது கடைசி தமிழன் இந்த மண்ணில் இருக்கும்வரை நிச்சயமாக ஓயாது” என்று திருவண்ணாமலையில் நடந்த முப்பெரும் விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க.வின் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்காக அங்கு கோட்டை முகப்பு தோற்றம் போல் பிரமாண்டமான அலங்கார பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் நடந்த விழா அருணை சகோதரிகளின் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 10 மணியளவில் ‘திராவிடத்தின் திருவிளக்கு’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கவிஞர் பா.விஜய் தலைமை தாங்கினார். கலைஞரின் சிறப்பு என்ற தலைப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., தளபதியின் உழைப்பு என்ற தலைப்பில் சொற்கோ கருணாநிதி, பெரியாரின் நெருப்பு என்ற தலைப்பில் இளையகம்பன், அண்ணாவின் கணிப்பு என்ற தலைப்பில் தஞ்சை இனியன், தமிழரின் தவிப்பு என்ற தலைப்பில் லலிதா, அரசாட்சி அமைப்பு என்ற தலைப்பில் நித்யபிரியா ஆகியோர் பேசினர்.

முன்னதாக கவியரங்கை மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய நாடு சந்தித்து கொண்டு இருக்கின்ற சவால்களை, நாம் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் நின்று விரட்டி அடித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய மொழி, மானம் காக்கிறேன் என்று எழுத தொடங்கியவர் தலைவர் கருணாநிதி. தமிழரின் மானம், சுய மரியாதை மற்றும் சமூகநீதியை உயிர் துடிப்பாக வகுத்துக் கொண்டு எழுதியவர்தான் கருணாநிதி.

அந்த தலைவரின் மனதில் ஏந்திய தீ என்பது ஈரோட்டில் பற்ற வைக்கப்பட்ட பெரியார் என்ற கொள்கை ஏற்றிய தீ. அந்த தீயை அணையாத விளக்காக மாற்றி அண்ணா தன்னிடம் கொடுத்ததை தலைவர் கருணாநிதி நம்மிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த தீயை தாங்கி பிடிக்கும் தீபமாக, விளக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டரில் செய்துள்ள பதிவில் ‘இந்தி’ தான் இந்த நாட்டை ஒன்றிணைக்க கூடிய வலிமை உள்ள ஒரே மொழி என்ற கருத்தை முன் வைக்கிறார். நான் இந்த மேடையில் இருந்து அவருக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தயவு செய்து சரித்திர பக்கங்களை திருப்பி பாருங்கள்.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சென்றதற்கு காரணமாக இருந்தது மொழி தான். அதுபோல தமிழ்நாடு தீப்பற்றி எரியக் கூடிய விதத்தில் உருவான பிரச்சினை என்பது இந்தி எதிர்ப்பு. 1930-ல் தமிழ்நாட்டை இந்தி எதிர்ப்பு களமாக மாற்றி அமைத்த பெருமை திராவிட இயக்கத்துக்கும், திராவிட இயக்க தலைவர்களுக்கும் உண்டு. அந்த உணர்வு இன்று வரை மங்கி போகவில்லை.

நீங்கள் ஒரு மொழி ஒரு மதம் என்று கொண்டு வந்து இந்த நாட்டை இணைத்து விடலாம் என்று கனவு கொண்டிருக்கிறீர்கள். அதுவே இந்த நாட்டை பிரிக்கக்கூடிய ஒன்றாக உங்களை பதவியில் இருந்து இறக்கக் கூடிய ஒன்றாக மாறக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்களுடைய மொழி திணிப்பு என்ற கொள்கையை சுருட்டி வைத்துக் கொள்ளக்கூடிய கால கட்டம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆட்சியில் இருந்தவர்கள் இந்தியை திணிக்கக்கூடிய எத்தனையோ முயற்சிகளை பல முறை, பலவிதங்களில் கையாண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும். அத்தனையையும் ஸ்டாலின் தனது போராட்டத்தால் எதிர்த்து தூக்கி எறிந்துள்ளார். இந்தி திணப்புக்கு எதிரான போராட்டம் என்பது கடைசி தமிழன், கடைசி தமிழச்சி இந்த மண்ணில் இருக்கும் வரை ஓயாது. அது உங்களுக்கு பெரிய சவாலாக அமையும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து சுமார் 11.30 மணியளவில் தமிழினம், சுயமரியாதை, திராவிடம் மேலும் தழைக்க இன்றைய தேவை என்ற தலைப்பில் பேராசிரியை பர்வீன் சுல்தானா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் இயக்கப்பணியா? என்று பேராசிரியர் ருக்மணி பன்னீர்செல்வம், விமலா அண்ணாதுரை ஆகியோரும் சமூகப் பணியா? என்று ம.எழிலரசி, புதுக்கோட்டை பாரதி ஆகியோரும் பேசினர். முன்னதாக பட்டிமன்றத்தை தி.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளர் ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

பின்னர் மாலை சுமார் 3 மணியளவில் உலகின் விடியல் உதயசூரியன் என்ற தலைப்பில் திரை இசையரங்கம் நடந்தது. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி என்.சிவா இதனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாலை சுமார் 5 மணியளவில் முப்பெரும் விழா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Next Story