திருவண்ணாமலையில் முப்பெரும் விழா; இந்தி திணிப்பை தி.மு.க. பார்த்துக்கொண்டு இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்தி திணிப்பை தி.மு.க. பார்த்துக்கொண்டு இருக்காது என்று முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை,
தி.மு.க. சார்பில் முரசொலி அறக்கட்டளை மூலம் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ், சிறந்த ஆட்டோ டிரைவர்களுக்கு நற்சான்று மற்றும் ரொக்கப்பரிசு, பதக்கம் வழங்கும் விழா, கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 4 மண்டலத்தில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி செயலாளர் ஒருவருக்கும், சிறப்பு சாதனை புரிந்த 3 பேருக்கும் கழக விருது மற்றும் இளம் சாதனையாளர் விருது, ரொக்கப்பரிசு வழங்கும் விழா மற்றும் தி.மு.க. சார்பில் பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நேற்று நடைபெற்றது.
மாலை 6 மணி அளவில் விருது வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. வரவேற்றார். கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமிஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் முன்னாள் எம்.பி. த.வேணுகோபாலுக்கு பெரியார் விருதையும், சி.நந்தகோபாலுக்கு அண்ணா விருதையும், ஏ.கே.ஜெகதீசனுக்கு கலைஞர் விருதையும், சித்திரமுகி சத்தியவாணிமுத்துக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதையும், தஞ்சை இறைவனுக்கு பேராசிரியர் விருதையும், மாணவ, மாணவிகள், ஆட்டோ டிரைவர்கள், இளம் சாதனையாளர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றுகளையும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவண்ணாமலையில் தி.மு.க.வின் முப்பெரும் விழா மிகவும் எழுச்சியோடு நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் எ.வ.வேலு, எதையும் செய்து முடிப்பவர். அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை வெற்றியோடு விழாவை நடத்தி முடித்துள்ளார். அவருக்கும் அவருக்கு உறுதுணையாக விழாவை சிறப்பாக நடத்த பணிகள் மேற்கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விழாவுக்கு வரும் முன்னே நான் கண்டிப்பாக ஒரு கட்டளையிட்டேன். நான் வரும் போது இங்கு ஒரு பேனர் கூட இடம் பெறக்கூடாது என்றேன். அந்த கட்டளை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விழா மட்டும் அல்ல இனி எந்த விழாவிலும் இதை கடைபிடிக்கவேண்டும். இதை நான் கண்டிப்போடு கூறுகிறேன்.
சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்ததில் விபத்தில் இறந்தார். ஒருவேளை தி.மு.க. பேனர் விழுந்து அவர் இறந்திருந்தால் ஊரே இரண்டு பட்டிருக்கும். திட்டமிட்டு பழி சுமத்தியிருப்பார்கள். விளம்பர பேனர் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது. எனவே நாம் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிமொழி எடுக்க வேண்டும்.
கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும். இனி வருங்காலங்களில் அவரது பிறந்த நாளில் சிறந்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். சாதனை படைத்தவர்களுக்கு இந்த விழாவில் பல்வேறு விருதுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் கருணாநிதி பிறந்த நாளில் கலை, இலக்கியத்தில் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
சிறந்த ஆட்டோ டிரைவர்களுக்கு முரசொலி அறக்கட்டளை சார்பில் இதுவரை 328 பேருக்கு ரூ.28 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலும், பாடல் ஒப்புவித்தல் போட்டியில் இதுவரை 14,394 பேருக்கு ரூ.2 கோடியே 28 லட்சத்து 88 ஆயிரத்து 250 மதிப்பிலும் விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
70 ஆண்டுகால தி.மு.க. பயணத்தில் நாம் பெறாத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. துப்பாக்கி குண்டுகளை நேருக்கு நேர் பார்த்த இயக்கம். 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. சரித்திர திட்டங்களை கொண்டு வந்த இயக்கம். இந்தியாவிலேயே இந்த சாதனையை வேறு எந்த கட்சியும் பெறவில்லை. அனைத்து தரப்பினருக்கும் ஆதரவாக இருக்கும் கட்சி தி.மு.க.
தற்போது தமிழகத்தில் பாரதீய ஜனதாவின் பினாமி அரசு, எடுபிடி அரசு நடக்கிறது. இதை அ.தி.மு.க. தொண்டர்களே கூறுகிறார்கள். இங்கு 30 பேருக்காக மட்டும் ஆட்சி நடக்கிறது. தமிழகத்தை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இன்ப சுற்றுலாவுக்கு வெளிநாடு செல்கின்றனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றார். ரூ.8,327 கோடிக்கு முதலீடு கொண்டு வந்ததாக கூறுகிறார். முறையாக கொண்டு வந்தால் நானே பாராட்டி இருப்பேன். முதலீடு குறித்து முறையாக அறிவித்தால் அடுத்த நொடியே நான் பாராட்டு விழா நடத்துகிறேன். வெள்ளை அறிக்கை வெளியிட துப்பில்லை. தெம்பில்லை.
எங்களை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். 41 நிறுவனங்களோடு முதலீடு செய்ததாக கூறுகிறார்கள். அந்த நிறுவனங்கள் என்னென்ன?, அதுகுறித்து தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசின் 100 நாள் சாதனை குறித்து நிருபர்கள் என்னிடம் கேள்வி கேட்ட போது, அவர்களின் பெரிய சாதனை 5 சதவீதம் பொருளாதாரத்தை குறைத்தது தான். வேலையில்லா திண்டாட்டத்தை அதிகப்படுத்தியது தான் அவர்களின் சாதனை என்று கூறினேன். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் கார் விற்பனை ஏன் குறைந்தது என்ற கேள்விக்கு அவரின் பதில் கவலையில்லாத பதிலாக உள்ளது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற நாசக்கார திட்டங்கள் கொண்டு வருகிறார்கள்.
இந்தியை தபால், ரெயில்வே துறைகள் மூலம் திணிக்கிறார்கள். இது கலாசார படையெடுப்பாகும். இதை தடுக்கும் பொறுப்பு தி.மு.க.வுக்கு உண்டு. தமிழ் கலாசாரம், மொழியை காக்கும் இயக்கம் தி.மு.க.
அமித்ஷா, மோடியின் தாய்மொழி இந்தி அல்ல. பிறகு ஏன் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். இந்தியாவில் 1,652 மொழிகள் பேசும் மக்கள் வசிக்கிறார்கள். பல மொழிகள் இருக்கும் பட்சத்தில் இந்திக்கு மட்டும் மகுடம் எதற்கு?. இன்று இந்தியை படிக்க வேண்டும் என்று சட்டம் போடுகிறார்கள். நாளை தமிழை படிக்கக்கூடாது என்று சட்டம் போடுவார்கள். இது கலாசார படையெடுப்பாகும். இந்தி மொழி பேசும் மக்களின் கலாசாரம் வேறு. தமிழ் மக்களின் கலாசாரம் வேறு.
நான் வெளிப்படையாக கூறுகிறேன் இந்தி திணிப்பை தி.மு.க. பார்த்துக்கொண்டு இருக்காது. எப்போதும் தடுப்பதில் உறுதியாக உள்ளோம். தியாகம் செய்ய நாம் தயாராக இருக்கிறோம் என்பதை நான் அறிவிக்கிறேன். இந்தியாவா..?, இந்தி...யா? என்றால் எங்களுக்கு இந்தியா தான் வேண்டும். பண்பாடு, மொழி போராட்டத்துக்கு அனைவரும் பங்கேற்க வேண்டும். ஆன்மிக எண்ணம் கொண்டவர்களும் இதில் பங்கேற்க வேண்டும். 1938-ல் தொடங்கப்பட்ட போராட்டம், 2019-லும் போராட்டம் நடத்த நாம் தயாராக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story