மாவட்ட செய்திகள்

மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி + "||" + Without preparations for the daughter's wedding Parole ended in tears Nalini returned to prison

மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி

மகள் திருமண ஏற்பாடுகள் நடைபெறாமல் பரோல் முடிந்து கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார் நளினி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, மகள் திருமண ஏற்பாட்டிற்காக பரோலில் வெளியே வந்திருந்தார். திருமண ஏற்பாடுகள் நடைபெறாத நிலையில் பரோல் முடிவடைந்ததால் அவர் கண்ணீருடன் சிறைக்கு திரும்பினார்.
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய கணவர் முருகன் ஆண்கள் சிறையில் உள்ளார். இவர்களுடைய மகள் ஹரித்ரா லண்டனில் டாக்டருக்கு படித்து வருகிறார்.

அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி 3 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு நிபந்தனையுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி அவர் சிறையில் இருந்து வெளியேவந்து சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது அவர் தனது பரோலை நீட்டிக்கக்கோரி மனுதாக்கல் செய்தார். அதன்படி அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டது. பரோலில் அவர் தங்கியிருந்த நேரத்தில் தினமும் வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இதற்காக அவரை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று வந்தனர்.

அவருடன், அவருடைய தாயார் பத்மாவதி தங்கியிருந்தார். நளினியின் தம்பி பாக்கியநாதன், தங்கை கல்யாணி, பாக்கியநாதனின் மகள் கவிநிலவு ஆகியோரும் அவ்வப்போது வந்து நளினியுடன் தங்கியிருந்தனர். பரோலில் வந்திருந்த நேரத்தில் ஆண்கள் சிறையில் இருக்கும் தனது கணவர் முருகனை அவர் 3 முறை சந்தித்து பேசி உள்ளார்.

அவருடைய மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து வேலூருக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. மேலும் பரோல் வழங்கிய நேரம் ஆடி மாதம் என்பதால் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகளும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் நளினியின் பரோல் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து அவர் பலத்த போலீஸ் காவலுடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்காக மாலை 3.30 மணிக்கு அவர் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார். வீட்டைவிட்டு வெளியே வந்தபோது அவருடன் தாயார் பத்மாவதி, தம்பி பாக்கியநாதன், தங்கை கல்யாணி ஆகியோரும் உடன் வந்தனர்.

மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட நளினி போலீஸ் வேனில் ஏறியபோது தாய், தம்பி, தங்கை ஆகியோரை பார்த்து கையசைத்தார். அப்போது அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தொரப்பாடியில் உள்ள பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். சரியாக மாலை 4 மணிக்கு வேலூர் பெண்கள் தனிச்சிறைக்குள் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கான தனி அறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.