கோத்தகிரியில், பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது


கோத்தகிரியில், பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 16 Sept 2019 3:30 AM IST (Updated: 16 Sept 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோத்தகிரி,

கோத்தகிரியில் உள்ள தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி கிரீன்வேலி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அந்த விடுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், மார்ட்டின் லூதர், போஜராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரபு(வயது 35), வினோத்குமார்(39), கோத்தகிரியை சேர்ந்த அப்துல் மஜீத்(51), யுவராஜ்(52), சங்கர்(39), சோலூர்மட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன்(50) மற்றும் விடுதி உரிமையாளர் ராஜா(52) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரத்து 70 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் கைது நடவடிக்கையின்போது கோத்தகிரியை சேர்ந்த ராபர்ட்(35), குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த விவேக் ஆகியோர் தப்பி சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதே விடுதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை கோத்தகிரி கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது மீண்டும் சூதாட்டம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story