எமரால்டு-ஊட்டி இடையே ரூ.2¼ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்


எமரால்டு-ஊட்டி இடையே ரூ.2¼ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 16 Sept 2019 3:15 AM IST (Updated: 16 Sept 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

எமரால்டு-ஊட்டி இடையே ரூ.2¼ கோடியில் சாலையை அகலப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மஞ்சூர்,

ஊட்டியில் இருந்து குன்னூர் வழியாக கோவைக்கு சாலை செல்கிறது. இதேபோன்று கோத்தகிரி வழியாக மற்றொரு சாலை செல்கிறது. இந்த சாலைகளில் பருவமழை காலங்களில் மண் சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு ஊட்டியில் இருந்து கெத்தை வழியாக கோவைக்கு 3-வது மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.48 கோடியில் மஞ்சூர் முதல் வெள்ளியங்காடு வரை சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் காத்தாடிமட்டம்-மஞ்சூர் சாலை மற்றும் குன்னூர்-கைக்காட்டி சாலை அகலப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் எமரால்டு-ஊட்டி இடையே இத்தலார் முதல் காந்திகண்டி வரை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அங்கு பருவமழை காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அந்த சாலையை அகலப்படுத்தும் பணி ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலையில் ஆங்காங்கே தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, சிறிய பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்படுகிறது. இதேபோன்று காந்திகண்டி முதல் குந்தா பாலம் வரை சாலையை அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story