தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி


தா.பேட்டை அருகே பரிதாபம்: மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பருடன் ராணுவ வீரர் பலி
x
தினத்தந்தி 17 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

தா.பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் நண்பருடன் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தா.பேட்டை,

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா ஒட்டம்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கவுதம் (வயது 30). இவர் மத்தியபிரதேச மாநிலத்தில் ராணுவத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் 15 நாட்கள் விடுமுறை எடுத்த கவுதம், நேற்று துறையூருக்கு வந்தார்.

அங்கிருந்து ஒட்டம்பட்டிபுதூருக்கு செல்ல பஸ் இல்லாததால், தா.பேட்டை வாணியர் தெருவில் வசித்து வந்த தனது நண்பர் கிருஷ்ணமூர்த்தியின்(28) வீட்டுக்கு கவுதம் சென்றார். பின்னர், அவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் கரிகாலியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு கவுதம் புறப்பட்டார்.

2 பேர் பலி

கவுதம் மோட்டார் சைக்கிளை ஓட்ட கிருஷ்ணமூர்த்தி பின்னால் உட்கார்ந்து இருந்தார். மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையோரம் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தா.பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான 2 பேருக்கும் இன்னும் திருமணம்ஆகவில்லை.

Next Story