இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்
x
தினத்தந்தி 17 Sept 2019 4:45 AM IST (Updated: 17 Sept 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் கரூர் கோர்ட்டில் சமூக ஆர்வலர் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்.

கரூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன், கற்பழிப்பு வழக்கில் கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் அருகே சீத்தப்பட்டி காலணியில் நடந்த ஒரு கூட்டத்தில், தமிழக அரசுக்கு எதிராகவும், இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் முகிலன் பேசியதாக அரவக்குறிச்சி போலீசார் தொடர்ந்த வழக்கு, கரூர் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக நேற்று திருச்சி மத்திய சிறையிலிருந்து கரூருக்கு அழைத்து வரப்பட்டு அந்த கோர்ட்டில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்தியை தமிழகத்தில் திணிக்காதே... எங்கள் நாடு தமிழ்நாடு... கா‌‌ஷ்மீர் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்திட வேண்டும் என அவர் கோ‌‌ஷம் எழுப்பினார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கோபிநாத், இந்த வழக்கினை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். இதற்கிடையே முகிலனை அவரது மனைவி பூங்கொடி கோர்ட்டில் சந்தித்து பேசினார்.

கொலை செய்ய பார்த்தார்கள்

முன்னதாக நிருபர்களிடம் முகிலன் கூறுகையில், கா‌‌ஷ்மீர் மீது மத்திய அரசு மிகபெரிய குற்றத்தை தொடுத்து கொண்டிருக்கிறது. கா‌‌ஷ்மீரில் 4 ஆயிரம் பேரை பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மணற்கொள்ளையர்கள் தான் எங்களை கொலை செய்ய பார்த்தார்கள். ஆனால் நாங்கள் தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் நாளை (அதாவது இன்று) கரூர் கோர்ட்டில் ஆஜராகிறேன் என்றார்.

Next Story