திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 போ் கைது


திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 போ் கைது
x
தினத்தந்தி 17 Sept 2019 4:30 AM IST (Updated: 17 Sept 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 29 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

காவிரியில் கடைமடைக்கு தண்ணீர் வராதது, கடலுக்கு தண்ணீா் வீணாக செல்வதையும், ஆற்று மணல் கொள்ளை மற்றும் ஏரி, குளங்கள் தூர்வாரததை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை மண்டல பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இதையொட்டி அங்கு தயார் நிலையில் ஏராளமான போலீசார் நேற்று பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல செயலாளர் செழியன் தலைமையில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் நேற்று காலை சுப்ரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

29 பேர் கைது

இதைத்தொடர்ந்து நுழைவுவாயில் அருகே அவர்கள், நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதில் 9 பெண்கள் உள்பட 29 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் அனைவரும் கே.கே.நகர் ஆயுதப்படை மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story