முசிறி அருகே மின்கம்பங்கள் சாய்ந்ததால் 4 நாட்களாக மின்தடை பொதுமக்கள் அவதி


முசிறி அருகே மின்கம்பங்கள் சாய்ந்ததால் 4 நாட்களாக மின்தடை பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 16 Sep 2019 10:45 PM GMT (Updated: 16 Sep 2019 7:35 PM GMT)

முசிறி அருகே மின்கம்பங்கள் சாய்ந்ததால்4நாட்களாக அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.

முசிறி,

முசிறி அருகே திருத்தியமலை ஊராட்சியை சேர்ந்த பாலப்பட்டி மேற்குகொட்டம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அந்த பகுதியில் சாலையோரத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் அள்ளி புதிதாக அமைக்கப்பட்ட சாலையின் ஓரத்திற்கு அருகே கொட்டியுள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழை யினால் மண் அள்ளப்பட்ட இடங்களில் குழிகள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் சாலையோரம் இருந்த மின்கம்பங்கள் திடீரென சாய்ந்ததால் மின்கம்பிகள் நிலத்தில் உரசியபடி இருந்தது.

பொதுமக்கள் அவதி

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக, அருகில் இருந்த மின்மாற்றியை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் மின்கம்பங்கள் சாய்ந்து 4 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், இன்னும் அப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது.

தொடர் மின்தடை காரணமாக அப்பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்து மின்சாரம் வழங்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story