காஞ்சீபுரம் பையனூரில், ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி நிதி - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


காஞ்சீபுரம் பையனூரில், ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி நிதி - எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 17 Sept 2019 5:00 AM IST (Updated: 17 Sept 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பையனூரில் ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க ரூ.1 கோடி நிதியை முதற்கட்டமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம் பையனூரில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 26-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் புதிய அரங்கம் கட்டித்தர வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று, ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி காஞ்சீபுரம் மாவட்டம் பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ‘ஜெயலலிதா படப்பிடிப்பு தளம்’ அமைப்பதற்கு முதற்கட்டமாக ரூ.1 கோடிக்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் வைத்து நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமை செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ஆ.கார்த்திக், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பொ.சங்கர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story