பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 21 பேர் கைது ரூ.90 லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு


பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 21 பேர் கைது ரூ.90 லட்சம் நகைகள், வாகனங்கள் மீட்பு
x
தினத்தந்தி 16 Sep 2019 10:00 PM GMT (Updated: 16 Sep 2019 8:01 PM GMT)

பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர் களிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு தென்கிழக்கு மண்டல போலீசார், திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்த கும்பலை கைது செய்து, அவர்களிடம் இருந்து நகைகள், வாகனங்களை மீட்டு இருந்தனர். அந்த நகைகள், வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோரமங்களா போலீஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் இஷா பண்ட் ஆகியோர் பார்வையிட்டனர்.

பின்னர் அந்த நகைகள், வாகனங்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூரு நகரில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 21 பேரை தென்கிழக்கு மண்டலத்தில் உள்ள கோரமங்களா, பரப்பனஅக்ரஹாரா, ஆடுகோடி, எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் 440 கிராம் தங்க நகைகள், 450 கிராம் வெள்ளி பொருட்கள், 47 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டு உள்ளது.

மேலும் 22 கிலோ கஞ்சா, 50 கிராம் எம்.டி.எம்.ஏ. என்ற போதைபொருளும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும். இதன்மூலம் நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 51 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கோரமங்களா மற்றும் பரப்பனஅக்ரஹாரா போலீசார், இருசக்கர வாகனங்களை திருடும் கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்துள்ளனர். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் கூறினார்.

பேட்டியின் போது துணை போலீஸ் கமிஷனர் இஷா பண்ட் உடன் இருந்தார்.

Next Story