சேரன்மாதேவியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: பாத்திர வியாபாரி வெட்டிக்கொலை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு


சேரன்மாதேவியில் பழிக்குப்பழியாக பயங்கரம்: பாத்திர வியாபாரி வெட்டிக்கொலை - 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Sept 2019 4:00 AM IST (Updated: 17 Sept 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

சேரன்மாதேவியில் பழிக்குப்பழியாக பாத்திர வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கோட்டாள தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் மாரி என்ற மாரியப்பன் (வயது 30). இவர் சேரன்மாதேவியில் உள்ள நூலகம் அருகில் பாத்திரக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் மாரியப்பன் நேற்று மாலை வீரவநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்றார். அப்போது ஒரு மோட்டார்சைக்கிளில் 3 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. கடையில் நின்று கொண்டிருந்த மாரியப்பனை அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் மாரியப்பன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி தங்கபாண்டியன் என்பவர் சேரன்மாதேவி பஸ் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாரியப்பன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.

தப்பிய ஓடிய 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பழிக்குப்பழியாக பாத்திர வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாரியப்பனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு கிட்டு என்ற அண்ணனும், ஒரு தங்கையும் உள்ளனர்.

Next Story