தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலையில் 8 வாலிபர்கள் கைது - மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை வழக்கில் 8 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவருடைய மகன் முருகேசன் (வயது 40). இவர் கப்பல் என்ஜினீயர் ஆவார். இவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார். நேற்று முன்தினம் மதியம் முருகேசன் தெருவில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். உடனே முருகேசன், அவரை சத்தம் போட்டு உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர் சென்று விட்டார். மாலையில் முருகேசன், தனது நண்பரான பிரையண்ட்நகர் 9-வது தெருவை சேர்ந்த விவேக்வுடன் (40) பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மோட்டார் சைக்கிள்களில் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் முருகேசன், விவேக் ஆகியோரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், தூத்துக்குடியை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, முருகேசன் தட்டிக்கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பிரையண்ட் நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிசெல்வம் (25), மகாலிங்கம் (21), வேல்முருகன்(19), முகேஷ் (19), வேலு (19), சிவந்தாகுளத்தை சேர்ந்த வழிவிட்டான் மகன் விஜி (18), 3 செண்டு பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் மாரிமுத்து (22), ராஜபாண்டி நகரை சேர்ந்த முருகன் மகன் அருண் (19) ஆகியோருடன் சேர்ந்து முருகேசன், விவேக்கை வெட்டி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி மாரிசெல்வம், மாரிமுத்து, அருண், மகாலிங்கம், வேல்முருகன், முகேஷ், வேலு, விஜி ஆகிய 8 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவான மணிகண்டனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story