சாத்தான்குளம் மீரான்குளம் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்க கூடாது - கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை


சாத்தான்குளம் மீரான்குளம் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டிக்க கூடாது - கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Sept 2019 3:30 AM IST (Updated: 17 Sept 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கூடாது என்று கூறி கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், ‘கீழ மீரான்குளம், மேல மீரான்குளம் பகுதியில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. மேலமீரான்குளம் பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் வீட்டு இணைப்பு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டு இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, தெருவிற்கு ஒரு நல்லி அமைத்து தண்ணீர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு அமைத்தால் அனைவரும் தண்ணீர் பிடிக்க முடியாது. எனவே வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இணைப்பை துண்டிக்க கூடாது. அதற்காக பணத்தை நாங்கள் செலுத்த தயாராக உள்ளோம். முன்பு போலவே வீட்டு இணைப்புகளில் தண்ணீர் வழங்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஆறுமுகநேரி திசைக்காவல் தெரு பொதுமக்கள் நலச்சங்க சட்ட ஆலோசகர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் கொடுத்த மனுவில், ‘ஆறுமுகநேரி பேரூராட்சி திசைக்காவல் தெற்கு தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2013-14-ல் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு திறக்கப்பட்டது. தற்போது வரை அந்த ரேசன் கடை மக்கள் பயன்பாட்டுக்கு வராமல், செயல்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று ரேசன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். எனவே பொதுமக்கள் வசதிக்காக இந்த ரேசன் கடையை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திரை கொடுத்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்கால் பாசன வாய்க்கால்கள் மூலமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. இந்த அணையை சரிவர பராமரிக்காமல் பாழ்பட்டு வருகிறது. அணையின் உட்பகுதியில் அமலை செடிகள் அதிக அளவில் காணப்படுவதால் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் உள்ளது. அணைக்கட்டின் புதிய பாலம் முதல் ஆற்றின் கடைசி பகுதி வரை சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் வந்தால் தண்ணீர் தடைபடும் நிலை எற்படும். எனவே மழை காலத்திற்கு முன்பு தாமிரபரணி ஆற்றின் உட்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அணையை சரிவர பராமரிக்க வேண்டும். அமலை செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

ஓட்டப்பிடாரம் தாலுகா கீழமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தமிழ்புலிகள் கட்சியினர் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாய குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை மற்றும் சுகாதாரம் போன்ற எந்தவித வசதிகளும் சரிவர செய்து தரப்படவில்லை. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெரியவர்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் பலர் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் இருந்து மதுரை வரை ரெயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதற்கான இழப்பீடு தொகை இளவேளங்கால் மற்றும் கோடங்கால் விவசாயிகளுக்கு இன்று வரை வழங்கப்பட வில்லை. அவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மச்சேந்திரன் கொடுத்த மனுவில், சாயர்புரம் மெயின் ரோட்டில் உள்ள அரசு மதுபான கடையை மாற்ற கோரி மனு கொடுக்கப்பட்டது. அதற்கு கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில வாணிப கழக மாவட்ட மேலாளரிடம் இருந்து மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பதில் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வரை அந்த மதுக்கடை மாற்றப்பட வில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உடனடியாக அந்த மது கடையை மாற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி மீளவிட்டான் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை எங்கள் பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஆலையால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தற்போது ஆலை மூடப்பட்டு உள்ளது. ஆலை மூலம் எங்கள் பகுதியில் உள்ள படித்த மற்றும் படிக்காதவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. ஆலை நிர்வாகம் சார்பில் எங்கள் கிராமத்தின் சுற்றுசூழல் நலன் கருதி மக்களின் கோரிக்கையை ஏற்று மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் சிலரின் செயல்பாடுகளால் எங்களால் மரக்கன்றுகளை வாங்க முடியவில்லை. அந்த ஆலை மூலம் எங்கள் பகுதிக்கு கிடைத்து வந்த சமுதாய வளர்ச்சி பணிகள் மீண்டும் எங்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி சங்கரபேரி பொதுமக்கள் சிலரும் கோரிக்கை மனு கொடுத்தனர். 

Next Story