சசிகலா ஒப்புதலுடன் செய்தி தொடர்பாளராக நியமனம்: ‘அ.ம.மு.க.வில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது’ - தஞ்சையில், புகழேந்தி பேட்டி
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா ஒப்புதலுடன் நான் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டவன். அ.ம.மு.க.வில் இருந்து என்னை யாரும் நீக்க முடியாது என்று தஞ்சையில், புகழேந்தி கூறினார்.
தஞ்சாவூர்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமைக்கும், அக்கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும் இடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று தஞ்சை வந்த புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே நாடு, ஒரே மொழி, அது இந்தி மொழி என்கிற குரலை பா.ஜ.க. எழுப்பி உள்ளது. அதை அவர்களால் சாதிக்க முடியாது. தமிழகத்தில் இருந்த பல அரசியல்கட்சி தலைவர்கள் இந்தி மொழிக்கு எதிராக போராடிய வரலாறு இருக்கிறது. ஆகவே ஒரு மொழி என்கிற திட்டம் எல்லாம் தேவையற்ற ஒன்று. அதை முயற்சிக்கவும் வேண்டாம். இந்தி மொழி திணிப்பு என்றால், 1965 போல ஒன்றிணைந்து போராட வேண்டும்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது சசிகலா ஒப்புதல் பெற்று என்னை செய்தி தொடர்பாளராக நியமித்தார்கள். எனவே என்னை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து விடுவிப்பதோ, நியமிப்பதோ யார் கையிலும் இல்லை. எந்த காலத்திலும் எதையும், யாரையும் நம்பி நான் இல்லை. கொள்கையை நம்பி தான் இருக்கிறேன். எதையும் சந்திக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.
நான் திராவிட பாரம்பாரியத்தில் இருந்து வந்தவன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த வெற்றிவேல் எல்லாம் என்னைப்பற்றி பேசுவது தான் கஷ்டமாக உள்ளது. கட்சியில் இருந்து பலரும் விலகி செல்லுகிறார்கள். இதை தடுக்க வேண்டும், அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என தினகரனிடம் தெரிவித்தேன்.
ஆனால், அவர் என்னை விசாரிக்க வேண்டும் என கூறினார். அப்படி விசாரிக்க வேண்டும் என என்னை தினகரன் இப்போது அழைத்தாலும் சென்று என் மீது குற்றம் இல்லை என நிரூபிக்க தயாராக உள்ளேன். தினகரன் கடந்த ஒராண்டுக்கு முன்பே விசாரணை குழு அமைத்து இருந்தால் பலரும் கட்சியை விட்டு சென்று இருக்க மாட்டார்கள்.
தினகரனை கட்சியை விட்டு தனிமைப்படுத்த வேண்டும் என திவாகரன் ஏதோ கோபத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அ.ம.மு.க., எனக்கு சொந்தமான கட்சி. யாரும் என் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அதேநேரம் நான், எந்த கட்சிக்கும் இதுவரை செல்லவில்லை.
சொத்து குவிப்பு வழக்கில் 15 ஆண்டுகளாக ஜெயலலிதா, சசிகலாவிற்காக வழக்கு ஆவணங்களை தூக்கிக்கொண்டு அலைந்தேன். சொத்து குவிப்பு வழக்கில் பல ரகசியம் இருக்கிறது. அதை எப்போது சொல்லவேண்டும் என எனக்கு தெரியும்.
சசிகலாவிற்கு தினகரன் மீது அதிருப்தி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மிக விரைவில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால், தற்போதைய ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. அமைச்சர் ஜெயக்குமாரை தவிர மற்ற யாரும் சசிகலாவை பற்றி குறை சொல்லவில்லை. எனவே நிச்சயம் ஒரு மாற்றம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story