டி.பண்ணைப்பட்டி ஊராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட குடிமராமத்து பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் - விவசாயிகள் மனு
டி.பண்ணைப்பட்டி ஊராட்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட குடிமராமத்து பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக கடந்த முறை நடந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
அதையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அப்போது, கொடைக்கானல் பூண்டி எம்.ஜி.ஆர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் ‘கஜா’ புயலில் சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு வந்து பார்வையிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சீரமைப்பு பணிகளை விரைவில் மேற்கொள்வதாக தெரிவித்து சென்றனர்.
ஆனால் தற்போது வரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் எங்கள் வீடுகளுக்குள் மழைநீர் ஒழுகுகிறது. எனவே சேதமடைந்த நிலையில் உள்ள வீடுகளை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் டி.பண்ணைப்பட்டி ஊராட்சி தெத்துப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் உள்ள கண்மாய்கள், ஆற்றுப்படுகைகளில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கேட்ட போது தங்களுக்கான நிதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே கலெக்டர் இதில் தலையிட்டு குடிமராமத்து பணிகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
அதேபோல் திண்டுக்கல்லை அடுத்த கரிசல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு அளித்தனர். அவர்களை தொடர்ந்து ஆத்தூர் தாலுகா மஞ்சள்பரப்பு அருகே உள்ள பெரும்பாறையை சேர்ந்த பொதுமக்கள், அதே பகுதியை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி இறந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணின் உறவினருக்கும் அந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளது. எனவே அவரையும் கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.
இவர்களை தொடர்ந்து மாவட்ட கேபிள் டி.வி. சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தனியார் கேபிள் டி.வி. ஒளிபரப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் கேபிள் டி.வி.க்கு ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரி மனு அளித்தனர். இவர்களை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story