திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 Sept 2019 4:15 AM IST (Updated: 17 Sept 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி உள்பட 2 பேர் தீக்குளிக்க முயன்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இந்த நிலையில் கையில் பையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மாற்றுத்திறனாளி வந்தார்.

பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு சென்ற அவர், திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்து கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை அவர் மீது ஊற்றினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

நான் திண்டுக்கல் செல்லமந்தாடியை சேர்ந்த முனுசாமி மகன் வெங்கடாசலபதி (வயது 48). நான் தற்போது கோவையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். எனது தந்தை நெடுஞ்சாலைத்துறையில் காவலாளியாக பணியில் இருந்த போது இறந்து போனார். எனவே வாரிசு அடிப்படையில் எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைப்பதாக இருந்தது. அதனை எனது தம்பி பெற்றுக்கொண்டார். இதற்காக எனக்கு பணம் தருவதாக கூறினார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்தேன். ஆனால் அவர் கூறியபடி பணம் தரவில்லை.

இதுகுறித்து அவரிடம் கேட்க சென்ற போது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். பின்னர் எனது தம்பி ஏமாற்றியது குறித்து போலீசில் புகார் அளித்தேன். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் எனது தம்பி தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் மனமுடைந்த நான் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றேன். ஆனால் நீங்கள் என்னை தடுத்துவிட்டீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதையடுத்து கலெக்டரிடம் இதுகுறித்து மனு கொடுக்கும்படி கூறி போலீசார் அவரை அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒரு பெண்ணும் திடீரென தான் சேலையில் மறைத்து கொண்டுவந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை தடுத்து, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நத்தம் சிறுகுடியை சேர்ந்த ஆசைப்பொன்னு (38) என்பதும், சிறுகுடி பகுதியில் 24 மணி நேரமும் 2 மதுபான கடைகள் செயல்படுகிறது. இதனால் இளைய சமுதாயத்தினரின் வாழ்க்கை பாழாகிறது.

இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தான் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து எனது கோரிக்கையை தெரிவிக்க வந்தேன் என்றார். பின்னர் அவரை எச்சரிக்கை செய்த போலீசார், கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story