கோத்தகிரியில், மலைவாழ் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


கோத்தகிரியில், மலைவாழ் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 8:38 PM GMT)

கோத்தகிரியில் மலைவாழ் மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கோத்தகிரி,

கோத்தகிரி காந்தி மைதானத்தில் உள்ள புயல் நிவாரண கூட அரங்கில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதனை குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள ஈசோ இந்தியா அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் சந்திர மோகன், கோத்தகிரி கீ ஸ்டோன் பவுண்டேசன் இயக்குனர் பிரதிம் ராய் ஆகியோர் முன்னிலை வகித்தார். 

முகாமில் சிறந்த மருத்துவ நிபுணர்கள் குமரவேல், பூங்கோதை, காமராஜா, சட்டநாதன் ஆகியோர் தலைமையில் 17 டாக்டர்கள் மற்றும் 25 ஆய்வக உதவியாளர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டு மலைவாழ் மக்களை பரிசோதனை செய்தனர். அவர்களுக்கு ரத்த அழுத்த பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை உள்பட முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை மற்றும் வாய் புற்றுநோய் பரிசோதனை பெண் டாக்டர்களால் செய்யப்பட்டது. இது தவிர ரத்த சோகை உள்ளதா? என்பது குறித்தும் பரிசோதிக்கப்பட்டது. முகாமில் ஏராளமான மலைவாழ் மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முன்னதாக அவர்களுக்கு தேவையான பஸ் வசதி மற்றும் தேநீர், சிற்றுண்டி வசதி செய்யப்பட்டு இருந்தது. இந்த முகாம் குறித்து ஈசோ இந்தியா அமைப்பின் நிறுவன தலைவர் டாக்டர் சந்திர மோகன் கூறியதாவது:-

இங்குள்ள மலைவாழ் மக்களில் சிலர் தங்களுக்கு என்ன நோய் உள்ளது? என்பது கூட தெரியாமல் உள்ளனர். எனவேதான் மருத்துவ வசதி கிடைக்காதல் இதுபோன்ற கிராமங்களுக்கு நேரில் சென்று மருத்துவ முகாம் நடத்துகிறோம். அவர்களை பரிசோதனை செய்து, நோய்கள் இருந்தால் அதற்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறோம். தனக்கு நோய் உள்ளது என்பதை ஒருவர் உணர்ந்தாலே பாதி சிகிச்சை முடிந்ததற்கு சமம். நோயை கண்டறிந்த பிறகு அவர்கள் தேவையான சிகிச்சையை ஆஸ்பத்திரிகளில் பெற்று குணமடைந்து விடுவார்கள். அடுத்த மாதம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் மருத்துவ முகாம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story