தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை; குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விபரீத முடிவு


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை; குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 17 Sept 2019 3:00 AM IST (Updated: 17 Sept 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

டி.என்.பாளையம்,

டி.என்.பாளையம் பள்ளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). தொழிலாளி. இவருடைய மனைவி ஈஸ்வரி. கருத்து வேறுபாடு காரணமாக இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரோகிணி என்ற பெண்ணுடன் வெங்கடேஷ் குடும்பம் நடத்தி வந்தார். வெங்கடேசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்து உள்ளது. இதனால் வெங்கடேசுக்கும், ரோகிணிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வெங்கடேஷ் வந்து உள்ளார். இதனால் ரோகிணிக்கும், வெங்கடேசுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது குடிப்பழக்கத்தை கைவிட வேண்டும் என வெங்கடேசை ரோகிணி கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியவில்லை.

இதனால் வெங்கடேஷ் மனமுடைந்து வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெங்கடேசின் உடலை கைப்பற்றி கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story