மழை இல்லாததால் ராமேசுவரம் கோவிலில் சில தீர்த்தங்கள் வறண்டன; தூர்வார பக்தர்கள் கோரிக்கை


மழை இல்லாததால் ராமேசுவரம் கோவிலில் சில தீர்த்தங்கள் வறண்டன; தூர்வார பக்தர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Sept 2019 3:15 AM IST (Updated: 17 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

மழை இல்லாததால் ராமேசுவரம் கோவிலில் உள்ள சில தீர்த்த கிணறுகள் வறண்டன. தீர்த்த கிணறுகளை தூர்வார பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவில் அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. ராமேசுவரம் கோவில் காசிக்கு நிகரான பிரசித்தி பெற்ற கோவிலாகும். ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலில் உள்ள முக்கிய சிறப்பே 22 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளதுதான். ஒவ்வொரு தீர்த்த கிணற்றிலும் நீராடினால் ஒவ்வொரு விதமான தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

இங்கு மகாலட்சுமி, சாவித்திரி, காயத்ரி, சரசுவதி, சக்கரதீர்த்தம், சேது மாதவ, நள, நீல, கவய, கவாட்ச, கந்தமாதன, பிரம்மஹத்திவிமோசன, சூரிய, சந்திர, சாத்யாமிர்த, சிவ, சர்வ, சங்கு, கயா, கங்கா, யமுனா, கோடி தீர்த்தம் என 22 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளன. இந்த தீர்த்த கிணறுகள் அனைத்துமே இயற்கையாக ஊற்றாகவே அமைந்திருப்பதால் நீரானது ஊறிக் கொண்டே இருப்பதோடு தண்ணீர் வற்றாமல் காட்சியளிக்கும்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருமே 22 தீர்த்த கிணறுகளிலும் தலா ஒரு நபருக்கு ரூ.25 கட்டணம் செலுத்தி அதற்கான டிக்கெட்டையும் பெற்று நீராடி விட்டு செல்கின்றனர். அது போல் கிணறுகளிலிருந்து தீர்த்த நீரை அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் வாளியில் இறைத்து பக்தர்கள் மீது ஊற்றுவார்கள்.

ராமேசுவரம் பகுதியில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி வரையில் தொடர்ச்சியாக மழை பெய்யும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக வட கிழக்கு பருவ மழை சரி வர பெய்யாமல் பொய்த்து போய் விட்டதுடன் கடந்த ஆண்டு ஒரளவு தான் பெய்தது. கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவ மழை தமிழகத்தின் பல ஊர்களிலும் பெய்த நிலையில் ராமேசுவரத்திலோ ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை.

மழையே இல்லாததால் எப்போதும் வற்றாமல் காட்சியளிக்கும் பல தீர்த்த கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டன. இதில் கங்கா, யமுனா தீர்த்த கிணறுகள் உள்ளிட்ட சில தீர்த்த கிணறுகள் வறண்டு போய் விட்டன. பல தீர்த்த கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து அடிப்பகுதியில் உள்ள மணல், பாறைகளும், கற்களும் தெளிவாக வெளியே தெரிவதுடன் பக்தர்கள் தீர்த்த கிணற்றில் வீசி செல்லும் சில்லரை காசுகளும் தெளிவாக வெளியே தெரிகின்றன.

ராமேசுவரம் கோவிலின் மிக முக்கிய சிறப்பே தீர்த்த கிணறுகள் தான். ஆனால் இந்த தீர்த்த கிணறுகள் பல வருடங்களாக தூர்வாரப்படவே இல்லை. இதனால் தீர்த்த கிணறுகளில் தண்ணீர் வற்றிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறண்டு வரும் தீர்த்த கிணறுகளை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பல கோடி ரூபாய் வருமானம் உள்ள காசிக்கு நிகராக விளங்கும் சிறப்பு பெற்ற ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளை மழை சீசன் தொடங்கும் முன்பு உடனடியான தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்ய வேண்டி பெயரளவில் இல்லாமல் சிறப்பான பூஜைகளை நடத்தவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழை இல்லாததால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் உள்ள ஏராளமான வீட்டு கிணறுகளும் வறண்டு வருகின்றன.

Next Story