கலெக்டர் அலுவலகம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 17 Sept 2019 3:45 AM IST (Updated: 17 Sept 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 மகள்களுடன் தாய் தீக்குளிக்க முயன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்தவர் செல்வமேரி. இவர்களுடைய மகள்கள் ஞானமணி, பிரியா, மஞ்சு. இதில் பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. இந்தநிலையில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு செல்வமேரி தனது மகள்களுடன் வந்தார்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தாங்கள் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை திறந்து தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து செல்வமேரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர் கூறும் போது, எனது கணவர் ஜோசப் சேட்டு சேலம் மாநகராட்சியில் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றினார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் மாநகராட்சி சார்பில் இதுவரை எங்களுக்கு பணப்பலன்கள் எதுவும் வழங்கப் படவில்லை.

மேலும் நிலுவையில் உள்ள பணப்பலன்களை கேட்டு மாநகராட்சியில் மனு கொடுத்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே பணப்பலன்கள் வழங்க லஞ்சம் கேட்கின்றனர். தற்போது நாங்கள் வறுமையில் வாடுகிறோம். இதனால் மனவேதனை அடைந்த நாங்கள் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் இங்கு வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story