மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து மனு கொடுத்த அடகுக்கடை ஊழியர்


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து மனு கொடுத்த அடகுக்கடை ஊழியர்
x
தினத்தந்தி 17 Sept 2019 4:15 AM IST (Updated: 17 Sept 2019 3:19 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்த அடகுக்கடை ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்கள் கொடுத்தனர்.

முதலில் மாற்றுத்திறனாளிகளிடத்தில் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

காட்பாடி வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். அடகுக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்திருந்தார். போலீசாரின் சோதனையையும் மீறி தண்ணீர் பாட்டிலில் மண்எண்ணெயுடன் வந்துள்ளார். கலெக்டரிடம் மனு கொடுத்தபோது அவர் மீது மண்எண்ணெய் வாசம் வந்துள்ளது. உடனே அங்கிருந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது பேண்ட் பாக்கெட்டில் மண்எண்ணெய் பாட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த சிலர் கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும், வீட்டுக்கு செல்லும் பாதையில் முள்வெட்டி போடுவதாகவும் இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு தீக்குளிக்க வந்ததாகவும் தெரிவித்தார். அவரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

வேலூரை அடுத்த கீழ்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கோவிலுக்கு வரி கொடுக்காததால் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி உள்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

Next Story