எடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன்? உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு


எடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன்? உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள் - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 16 Sep 2019 11:15 PM GMT (Updated: 16 Sep 2019 9:49 PM GMT)

கேள்வி கேட்டால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோபப்படுவது ஏன்?, உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் எங்களை சட்டமன்றத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை,

போளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கே.வி.சேகரன்- தேன்மொழியின் மகன் கே.வி.எஸ்.கோபிராஜுக்கும், செங்கல்பட்டு தாலுகா கரும்பாக்கம் கே.நந்தகுமார்- சாந்தியின் மகள் என்.சந்தியா என்ற ராஜேஸ்வரிக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நேற்று திருவண்ணாமலை அருணை கல்லூரி வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.

விழாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி சீர்திருத்த முறையில் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது இங்கு சீர்திருத்த திருமணம் நடைபெற்று உள்ளது. ஒரு காலத்தில் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி அங்கீகாரம் இல்லாதது. தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு முன்பு நடந்த சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அண்ணா முதல்-அமைச்சரான பிறகு சட்டமன்றத்தில் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கு பிறகு சீர்திருத்த திருமணங்கள் அதிகமாக நடக்கிறது.

முன்பெல்லாம் அய்யர்களை வைத்து திருமணம் நடத்தி வைப்பார்கள், அப்போது அய்யர்களுக்கு டிமாண்டு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி திருமணம் நடத்தி வைக்க அய்யர்களை விட எங்களை போன்றவர்களுக்கு தான் அதிக டிமாண்டு வந்து விட்டது. திருமண விழாவில் அரசியல் பேசினால் தவறாக நினைப்பார்கள். ஆனால் நான் அரசியல் பேசாமல் சென்றால் மக்கள் கோபம் அடைவார்கள்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளிநாட்டிற்கு சென்று வந்தார். அவருடன் 10, 15 அமைச்சர்கள் சென்று வந்தனர். அடுத்த கட்டமாக வெளிநாட்டுக்கு செல்ல சில அமைச்சர்கள் தயாராக உள்ளனர் என்று செய்திகள் வருகிறது.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு பெற்றதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி 2-வது உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்தார். இதுபற்றி கேள்வி கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை. இதுவரை சுமார் ரூ.5 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என்பதையெல்லாம் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்டால் அவருக்கு கோபம் வருகிறது.

கேள்வி கேட்க நீங்கள் யார்? என எங்களை பார்த்து கேட்கிறார். தமிழக சட்டமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் எங்களை உங்களிடம் கேள்வி கேட்கத்தான் மக்கள் சட்டமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். கேள்வி கேட்பது எங்கள் உரிமை. பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’. எதுவும் செய்யவில்லை, அதனால் உங்களால் பதில் கூற முடியவில்லை.

இந்த ஆட்சியில் கலெக்சன், கரப்ஷன், ஊழல் தொடர்ந்து நடந்து வருகிறது. இன்னும் 1ஆண்டு தான், ஆட்சி இருக்கும் வரை சுருட்டிக்கொண்டு செல்வோம் என செயல்படுகிறார்கள்.

தமிழகத்தில் காமராஜர், பக்தவத்சலம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்கள் ஆட்சி செய்தனர். எந்த ஆட்சியிலும் இல்லாத கொடுமை தற்போது நடந்து வருகிறது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அலுவலகம் செயல்படும் சென்னை கோட்டையில் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற கொடுமை நடந்தது உண்டா?.

குட்கா புகையிலை போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் பேராபத்தாக உள்ளது. இதனை விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் பல கடைகளில் குட்கா புகையிலை போன்றவை வெளிப்படையாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதுணையாக இருக்கிறார். இது பற்றி சட்டமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக கூறினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சருக்கு துணையாக சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய ஐ.ஜி, டி.ஜி.பி. போன்றவர்கள் துணை நிற்கிறார்கள். அவர்களுக்கும், அமைச்சருக்கும் மாமுல் வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னிடமுள்ள நெடுஞ்சாலைத் துறையை பயன்படுத்தி அவருடைய வேண்டியவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்குவதில் பல்வேறு துறைகளில் கோடி, கோடியாக லஞ்சம் வாங்கியதாக தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கை எதிர்த்து போராடி அல்லது சி.பி.ஐ.யிடம் எடுத்துக்கூறி தன் மீது தவறு இல்லை என எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருந்தால் அதனை வரவேற்று இருப்போம். ஆனால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடை ஆணை பெற்றுள்ளார். ஊழல், லஞ்சம், கமிஷன், கரப்ஷன் தொடர்ந்து நடந்து வருகிறது.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நல்லாட்சி உருவாகும் வாய்ப்பு, சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வருகிற தேர்தல் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி அல்லது உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் தி.மு.க.விற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தர உறுதி ஏற்க வேண்டும். இதனை மகிழ்ச்சியுடனும் உரிமையுடனும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்று வாழ்த்துங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட தி.மு.க.செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அனைவரையும் கே.வி.சேகரன் எம்.எல்.ஏ., தேன்மொழி, கே.நந்தகுமார், சாந்தி ஆகியோர் வரவேற்றனர்.

முன்னதாக நேற்று முன்தினம் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கலைஞர் அறக்கட்டளைக்கு திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.51 லட்சத்திற்கான காசோலையை எ.வ.வேலு எம்.எல்.ஏ. வழங்கினார்.

Next Story