‘பாண்லே’ பால் பொருட்களின் விலை உயருகிறது; விரைவில் அமலுக்கு வருகிறது


‘பாண்லே’ பால் பொருட்களின் விலை உயருகிறது; விரைவில் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 17 Sept 2019 4:45 AM IST (Updated: 17 Sept 2019 4:23 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி ‘பாண்லே’ பால் பொருட்களின் விலை உயருகிறது. இந்த புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரி,

தமிழகத்தில் சமீபத்தில் பால் விலை உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையொட்டி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4-ம், விற்பனை விலை ரூ.6-ம் உயர்த்தி புதுவை அரசு அறிவித்தது.

உடனடியாக அமலுக்கு வந்ததால் ‘பாண்லே’ பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. ‘பாண்லே’ மையங்களில் பாலை தவிர மோர், தயிர், நெய், லஸ்சி, பனீர், பாதாம் பவுடர், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், பால்பேடா, டீ-காபி, பேவர்டு மில்க் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

பால் விலை உயர்வை தொடர்ந்து, பாண்லேவின் உப பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி நெய், பால்பவுடர், பனீர், பால்பேடா, தயிர், டிலைட் பால் மற்றும் பேவர்டு மில்க் ஆகியவற்றின் விலை உயருகிறது. இந்த உப பொருட்களின் விலை ஏற்றம் விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் இதர பால் சார்ந்த பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Next Story