தாய்மொழி பற்றினை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம்


தாய்மொழி பற்றினை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம்
x
தினத்தந்தி 17 Sept 2019 5:30 AM IST (Updated: 17 Sept 2019 5:20 AM IST)
t-max-icont-min-icon

தாய்மொழிபற்றினை கொச்சைப்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை மாநில காங்கிரஸ் தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜாதி, இனம், மொழி, மதம் கடந்து சகோதர மனப்பான்மையுடன் இந்திய மக்கள் ஒற்றுமையாய் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடையே பிரிவினையை தூண்டும் நோக்கத்துடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இந்தி மொழிதான் சிறந்தது என்று கூறியிருப்பது தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் விஷயமாகும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பிற மொழி பேசும் மக்களின் மொழி பற்றினை குறைவாக நினைக்கக் கூடாது. உலகளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய தேசத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் சுயரூபம் அமித்ஷா மூலம் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்திய தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல மொழி பேசுகின்ற மக்களின் தாய்மொழி பற்றினை கொச்சைப்படுத்தும் செயலை அமித்ஷா இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு மொழிதான் சிறந்த மொழி, பெரும்பாலான மக்கள் பேசுகின்ற மொழி என்று இந்தி பேசும் மக்களை மட்டும் புகழ்ந்து பேசுவது அரசியல் சுய லாபத்துக்குத்தான் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். கொள்கை மறந்து மதவாதத்தை ஊக்குவித்து மொழி உணர்வை தூண்டி விட்டு நாட்டு மக்களை ஏமாற்றும் ஏதேச்சதிகார எண்ணத்தை அமித்ஷா மாற்றிக்கொள்ள வேண்டும்.

உயரிய உள்துறை மந்திரியாக பொறுப்பு வகிக்கும் அமித்ஷா தனது பதவிக்கு பெருமை சேர்க்க இனிமேலாவது கற்றுக்கொள்ள வேண்டும். பிரிவினைவாத சக்திகளை தகர்த்தெறிந்து தேச ஒற்றுமையை என்றும் காத்து சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் காட்டும் தூய பாதையில் பயணித்து மதவாத, மொழிவாத பாரதீய ஜனதாவுக்கு பாடம் புகட்டுவோம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story