விழுப்புரம், தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்


விழுப்புரம், தேர்வு கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 17 Sep 2019 11:00 PM GMT (Updated: 17 Sep 2019 1:26 PM GMT)

தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து விழுப்புரம் அரசு கல்லூரியில் மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு ரூ.68 ஆக இருந்த தேர்வு கட்டணம் 100 ரூபாயாகவும், முதுகலை பாடப்பிரிவுகளுக்கு ரூ.113 ஆக இருந்த தேர்வு கட்டணம் 160 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் நேற்று காலை இந்த கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்துவிட்டு வெளியே வந்தனர்.

தொடர்ந்து, அவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் மாணவர்கள் கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் நகர போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

இதையடுத்து கல்லூரி முதல்வர் மாதவி மற்றும் துறைத்தலைவர்கள் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன் பிறகு மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இருப்பினும் போராட்டம் முடிந்ததும் மாணவ- மாணவிகள் மீண்டும் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்துவிட்டு அவரவர் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்வி கட்டணத்தை உயர்த்திய பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story