வால்பாறையில் நள்ளிரவில் காட்டுயானைகள் அட்டகாசம்: தேவாலயம், மளிகை, ரேஷன்கடைகளை இடித்து சேதப்படுத்தின


வால்பாறையில் நள்ளிரவில் காட்டுயானைகள் அட்டகாசம்: தேவாலயம், மளிகை, ரேஷன்கடைகளை இடித்து சேதப்படுத்தின
x
தினத்தந்தி 17 Sep 2019 11:15 PM GMT (Updated: 17 Sep 2019 5:21 PM GMT)

வால்பாறையில் காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நள்ளிரவில் தேவாலயம், ரேஷன்கடை, மளிகை கடைகளை இடித்து சேதப்படுத்தின.

வால்பாறை,

வால்பாறை பகுதிக்கு கேரள வனப்பகுதிகளிலிருந்து ஆண்டுதோறும் காட்டுயானைகள் கூட்டம் வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது தமிழக- கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஹைபாரஸ்ட், பன்னிமேடு,சங்கிலிரோடு,தோனிமுடி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளுக்கு கேரளாவில் இருந்து காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றன. இதனால் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் உள்ள தாய்முடி, வாகமலை, தோனிமுடி, பன்னிமேடு, சங்கிலிரோடு ஆகிய எஸ்டேட் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை ஒட்டிய சிறுவனச்சோலைகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இதில் மூன்று குட்டிகள் உட்பட 5 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் பன்னிமேடு சங்கிலிரோடு எஸ்டேட் பகுதிக்குள் நள்ளிரவில் புகுந்து அட்டகாசம் செய்தன. அங்கிருந்த தாமரை மகளிர்சுயஉதவிக்குழு ரேசன்கடையை இடித்து உள்ளிருந்த 200 கிலோ ரேஷன் அரிசியை தின்று சேதப்படுத்தின. இது தவிர கடையிலிருந்த சர்க்கரை மூட்டைகளையும்,மண்எண்ணெய் பேரல்களையும் சேதப்படுத்தியது.

பின்னர் அங்கிருந்த சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் சுவற்றையும் உடைத்து விட்டு அருகிலிருந்த செல்லப்பன் என்பவரின் மளிகைக்கடையையும் உடைத்து சேதப்படுத்தியது.

அப்போது அந்த வழியாக வந்த தொழிற்சாலை பணியாளர்கள் பீதி அடைந்தனர். பின்னர் அவர்கள் சுதாகரித்துக்கொண்டு காட்டுயானைகளை விரட்டினர். அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் கூட்டம் முடீஸ் பஜாருக்கு அருகில் உள்ள தாய்முடி எஸ்டேட் 2 -ம் நம்பர் தேயிலைத் தோட்ட பகுதியில் முகாமிட்டன. இந்த நிலையில் எஸ்டேட் பணிமனை, ஆஸ்பத்திரி பணியாளர்கள் குடியிருப்பு கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவை அருகில் உள்ளதால் முடீஸ் எஸ்டேட் பகுதி மக்கள் அச்சத்திலும், பீதியிலும் இருந்து வருகின்றனர். இதனால் மானாம்பள்ளி வனச்சரகர் நடராஜன் உத்தரவின் பேரில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் வாகனத்துடன் அந்த பகுதியில் முகாமிட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதே போல கேரள மாநிலம் மயிலாடும்பாறை வனப்பகுதி வழியாக காட்டுயானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வருகின்றன. எனவே தமிழக கேரள எல்லைப்பகுதியில் மயிலாடும்பாறைக்கும் வாகமலை எஸ்டேட் பகுதிக்கும் இடைப்பட்ட வனப்பகுதியில் மானாம்பள்ளி வனச்சரகத்தின் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுயானைகள்பன்னிமேடு, ஹைபாரஸ்ட், வாகமலை,தோனிமுடி,நல்லமுடி,தாய்முடிஆகிய எஸ்டேட் பகுதிகளுக்குள் நுழைவதற்கு வாய்ப்புள்ளதால் இந்த பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இருந்தாலும் வால்பாறை பகுதியில் வருகிற மார்ச் மாதம் வரை காட்டுயானைகள் நடமாட்டம் இருக்கும்.இதனால் வனத்துறையின் உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு வாகன வசதிகளுடன் பல்வேறு வனச்சரக பகுதியிலிருந்து கூடுதல் வனப் பணியாளர்களை பணியில் அமர்த்தி உயிர் சேதங்களும், பொருட்சேதங்களும் ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து எஸ்டேட் பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

வால்பாறை,மானாம்பள்ளி வனச்சரக பகுதிக்குட்பட்ட எஸ்டேட் பகுதிகளுக்குள் காட்டுயானைகள் நுழையத் தொடங்கிவிட்டதால் அனைத்து எஸ்டேட் பகுதி மக்களும் இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். வேலைக்கு செல்பவர்கள் அந்த பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதா என்பதை அறிந்து பணிக்கு செல்லவேண்டும். அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் உங்கள் பகுதியில் பணிபுரிந்து வரும் வனபாதுகாவலர்களையும், வேட்டைத்தடுப்பு காவலர்களையும் ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு காட்டுயானைகள் நடமாட்டம் குறித்து கேட்டறிந்து தங்களது எஸ்டேட் தொழிலாளர்களை பணிக்கு அனுப்பவேண்டும் என்று வால்பாறை எஸ்டேட் பகுதி மக்களை வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்

Next Story